சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு: மேலும் $48 பில்லியன் ஒதுக்கீடு

கொவிட்-19 கிருமித்தொற்றால் எதிர்பாராத நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, நிறுவனங்கள், ஊழியர்கள், குடும்பங்களுக்கு உதவுவதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் மேலும் $48.4 பில்லியனை ஒதுக்கி இருக்கிறது.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்ட வீழ்ச்சியை ஈடுகட்டுவதற்காக $6.4 பில்லியன் உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக, கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்காக சிங்கப்பூர் கிட்டத்தட்ட $55 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 11%.

நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 26) துணை வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட் இந்த விவரங்களை வெளியிட்டார்.

“இது ஒரு தனிச்சிறப்புமிக்க தொகுப்புத் திட்டம். இந்த இக்கட்டான சூழலில் அவசியமான திட்டம்,” என்றார் திரு ஹெங்.

உலகளவில் பொருளியல் நெருக்கடி ஏற்பட்டபோது அதைச் சமாளிப்பதற்காக 2009ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின்போது $20.3 பில்லியன் மதிப்பிலான மீட்சிக்கான தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இப்போது, அதைப்போல் இரு மடங்கிற்குமேல் மதிப்புடைய ‘மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டம்’ எனக் குறிப்பிடப்படும் துணை வரவுசெலவுத் திட்டத்திற்காக நாட்டின் காப்பு நிதியில் இருந்து $17 பில்லியன் எடுக்கப்படவுள்ளது.

உலகச் சுகாதார நிறுவனத்தால் பேரளவு நோய்ப் பரவலாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா கிருமித்தொற்று பிரச்சினையை ‘மிகவும் சிக்கலான இயல்பைக் கொண்ட, எதிர்பாராத நெருக்கடி’ என திரு ஹெங் விவரித்தார்.

“பொருளியல்ரீதியில் சொன்னால், நாடு சுதந்திரமடைந்த பிறகு எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளியல் சூழலாக இது இருக்கலாம்,” என்றார் அவர். இந்த அசாதாரண சூழலை எதிர்கொள்ள அசாதாரண நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் சொன்னார்.

(மேல் விவரம் நாளைய தமிழ் முரசு அச்சு பிரதியில்)

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon