சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் பங்ளாதேஷ் ஊழியருக்கு ஆண் குழந்தை பிறந்தது

கொரோனா கிருமித்தொற்று காரணமாக கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 39 வயதான கட்டுமான ஊழியரின் மனைவி ஆரோக்கியமான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அந்த ஊழியருக்கு இன்னும் இந்தத் தகவல் தெரியாது. அவர் மயக்கமுற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பங்ளேதேஷ் நாட்டைச் சேர்ந்த அந்த ஊழியர் சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்ட 42வது நபர். அவர் கிருமித்தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது.

கொரோனா கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து விடுபட்ட அவர், சில நாட்களுக்கு முன்பு தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்திலிருந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊழியர் நிலையம் அதன் ஃபேஸ்புக் பதிவில் இன்று (மார்ச் 31) தெரிவித்தது.

மற்றொரு அரசு மருத்துவமனையில் அவர் இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

கிருமித்தொற்று ஏற்படுவதற்கு முன்பாகவே அந்த ஊழியர் சுவாசப் பிரச்சினை, சிறுநீரகப் பிரச்சினை, நிமோனியா போன்றவற்றால் சிரமப்பட்டு வந்ததாக பங்ளாதேஷ் தூதரகம் முன்பு தெரிவித்திருந்தது.

“அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. ஆனால், அண்மைய மேம்பாடுகளால் நாங்கள் ஊக்கம் கொள்கிறோம். அவருக்காக அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் பதிவு குறிப்பிட்டது.

அந்த ஊழியரின் மனைவிக்கு நேற்று (மார்ச் 30)  குழந்தை பிறந்ததாகவும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் நிலையம் தெரிவித்தது.

குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள், அந்தப் பெண் தம் கணவரை காணொளிக் கலந்தாய்வு முறையில் பார்த்ததாகவும் நிலையம் குறிப்பிட்டது.

ItsRainingRaincoats சமூக நிறுவனத்தின் நிறுவனரான திருவாட்டி தீபா சுவாமிநாதன், மற்றொரு ஃபேஸ்புக் பதிவில் அந்தக் குழந்தையின் புகைப்படத்தையும் பதிவேற்றியிருந்தார். உள்ளூர் நேரப்படி நேற்று (மார்ச் 30) அதிகாலை 12.30 மணிக்கு குழந்தை பிறந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பங்ளாதேஷ் ஊழியரின் மனைவியுடன் தினமும் தொடர்பில் இருந்துவரும் திருவாட்டி தீபா, அண்மையில் ஏற்பாடு செய்த நன்கொடைத் திரட்டு மூலம் தாய்க்கும் சேய்க்குமான புதிய உடைகள், பால் புட்டி உட்பட சில பொருட்களைத் திரட்டி பங்ளாதேஷுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

தாயும் சேயும் நலமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், குழந்தையின் புகைப்படத்தைப் பதிவிட அதன் தாய் அனுமதி அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

“இந்தக் குழந்தைக்கு வாழ்த்துக்கூறுவதி எங்களுடன் இணையுகங்கள்; குழந்தை அதன் தந்தையை மகிழ்ச்சியுடன், ஆரோக்கியத்துடன் விரைவில் காண பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று தம் பதிவில் திருவாட்டி தீபா குறிப்பிட்டிருந்தார்.

குடும்ப வழக்கப்படி ஏழு நாட்களுக்குப் பிறகே குழந்தைக்குப் பெயர் வைக்கப்படும் என்று தீபா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

திருமணமாகி ஈராண்டுகளாகியுள்ள இந்தத் தம்பதியின் முதல் குழந்தை இது.

அந்தக் குடும்பத்தினரின் செலவுகளுக்காக மேலும் $1,800ஐ நன்கொடையாக வழங்க இருப்பதாக அந்த ஊழியர் வேலை பார்க்கும் யி கி இன்னொவேஷன்ஸ் நிறுவனம் இன்று தெரிவித்தது.

அந்த நிறுவனம், வெளிநாட்டு ஊழியர் நிலையம், அவர் தங்கியிருந்த தங்குவிடுதியை நடத்தும் மினி என்வையான்மென்ட் சர்வீசஸ் ஆகியன இணைந்து கடந்த மாதம் $10,000ஐ நன்கொடையாக அந்தக் குடும்பத்துக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. 

#சிங்கப்பூர் #கட்டுமான ஊழியர் #கொவிட்-19

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon