கொரோனா கிருமி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைச் சமாளிக்க சிங்கப்பூர் குடும்பங்களுக்கு உதவும் விதமாக 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரும் இந்த மாதம் $600 பெறுவர் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்து இருக்கிறார். 'ஒற்றுமைக்கான ரொக்க வழங்குதொகை' என அழைக்கப்படும் இந்தத் தொகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.
கடந்த பிப்ரவரி மாதம் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட போது 'பராமரிப்பு, ஆதரவு தொகுப்புத் திட்டத்தின்'கீழ் சிங்கப்பூரர்களுக்கு அவர்களுடைய வருமானத்தின் அடிப்படையில் $300, $600 அல்லது $900 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்போது அதில் இருந்து $300ம் கூடுதலாக $300ம் சேர்த்து 'ஒற்றுமைக்கான ரொக்க வழங்குதொகையாக' வழங்கப்படும்.இதனால் அரசாங்கத்திற்குக் கூடுதலாக $1.1 பில்லியன் செலவாகும் என நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.
தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை அரசாங்கத்திடம் வழங்கி உள்ள பெரும்பாலான சிங்கப்பூரர்களின் வங்கிக் கணக்கில் இம்மாதம் 14ஆம் தேதிக்குள் $600 தொகை சேர்க்கப்பட்டு விடும். மற்றவர்களுக்கு இந்த மாதம் 30ஆம் தேதி முதல் காசோலையாக அனுப்பப்படும். தகுதியுள்ள குடிமக்கள் அனைவருக்கும் இந்த வழங்குதொகை குறித்து இம்மாதம் 15ஆம் தேதியில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
பராமரிப்பு, ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட மற்ற வழங்குதொகைகள் அனைத்தும் ஜூன் மாதமே வழங்கப்படும். அந்தத் தொகைகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கிடைக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பராமரிப்பு, ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் $600 அல்லது $900 பெறத் தகுதி பெற்றவர்களுக்கான எஞ்சிய தொகை, 20 மற்றும் அதற்கும் குறைந்த வயதுடைய பிள்ளைகளைக் கொண்ட பெற்றோருக்குக் கூடுதலாக வழங்கப்படும் $300, 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு 'பேஷன்' அட்டையில் பணம் நிரப்புவதற்கான $100 ஆகியவையும் அதில் அடங்கும்.

