வெளிநாட்டு ஊழியர்களைத் தங்க வைக்க புக்கிட் மேரா பகுதியில் 21 புளோக்குகள்

1 mins read
0126e0d2-591c-4272-aa65-26eaa9e6937f
En bloc திட்டத்தின்கீழ் குடியிருப்பாளர்களிடமிருந்து முன்பு திருப்பி வாங்கப்பட்ட இந்த வீடுகள் இன்னும் இடிக்கப்படவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்கவைக்க காலியாக இருக்கும் ஏறத்தாழ 21 வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகள் புதுப்பிக்கப்படுகின்றன.

புக்கிட் மேரா வட்டாரத்தில் இருக்கும் இந்த புளோக்குகளில் கிருமித்தொற்று ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கவைக்கப்படுவர் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு இன்று (ஏப்ரல் 8) கூறியது.

அடுத்த சில வாரங்களில் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடையும் என்றும் அதனை அடுத்து படிப்படியாக வெளிநாட்டு ஊழியர்கள் அந்த மூவறை வீடுகளில் தங்க தொடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த புளோக்குகள் En bloc திட்டத்தின்கீழ் குடியிருப்பாளர்களிடமிருந்து முன்பு திருப்பி வாங்கப்பட்டவை என்று அமைச்சு தெரிவித்தது.

அந்த வீடுகள் 2018ஆம் ஆண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அவை இன்னும் இடிக்கப்படவில்லை.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான விடுதிகளில் கொரோனா கிருமித்தொற்று பிரச்சினை எழுந்துள்ளதால் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை வேறு இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அத்தியாவசிய பணிகள் தடையின்றி தொடர இது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. இதை உறுதி செய்ய அமைப்புகளுக்கிடையிலான பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரெட்ஹில் கிளோஸ் வட்டாரத்தில் உள்ள வீடுகளில் துப்புரவு, பராமரிப்பு ஊழியர்கள் தங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#வெளிநாட்டு ஊழியர் #சிங்கப்பூர் #கொவி-19 #தமிழ்முரசு