மனிதவள அமைச்சர் டியோ: ஆட்குறைப்பு அதிகமாகலாம்

நோய்ப் பரவல் முறியடிப்பு காலத்துக்குப் பிறகு ஆட்குறைப்பு அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் அது இன்னும் அடிமட்டத்தைத் தொடவில்லை என்றும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.

இந்த இருண்ட சூழ்நிலையின் காரணமாக, அரசாங்கம் அதிகமான வேலைப் பயிற்சித் திட்டங்களை, குறிப்பாக பணியிடைக்கால வேலை தேடுவோருக்காக அறிமுகம் செய்யும்.

தங்களுக்கு ஒரு நிரந்தர வேலை கிடைப்பதற்குமுன், இந்த வேலைப்பயிற்சித் திட்டம் மூலம் அவர்கள் அனுபவம் பெறலாம் என்றும் திருவாட்டி டியோ இன்று கூறினார்.

“இருக்கும் வேலை வாய்ப்புகளைக் காட்டிலும் வேலை தேடுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். இது எதிர்பார்க்கப்படாத ஒன்றுதான். இதுபோன்ற ஒரு கொள்ளைநோய் நம்மை இந்த அளவுக்குத் தாக்கும் என்று யாரும் கணித்திருக்க மாட்டார்கள்.

“இருப்பினும், நாம் சிறிதும் துவண்டு விடாமல், எந்த வகையிலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்த வாய்ப்புகள் சிங்கப்பூரர்களைச் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் டியோ இன்று ஊடகங்களுக்கு அளித்த மெய்நிகர் நேர்காணல் மூலம் விவரித்தார்.

நோய் முறியடிப்புக் காலம் ஜூன் மாதம் 1ஆம் தேதி முடிவடைந்தவுடன், வேலை ஆதரவுத் திட்டத்தின் மூலம் முதலாளிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சம்பள மானியத் தொகை முடிந்தவுடன் நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொள்ள வாய்ப்புண்டு.

புதிய வேலையில் அமர பலரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால், நிறுவனத்தின் வர்த்தக நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியாத முதலாளிகள் புதியவர்களை வேலைக்கு அமர்த்தத் தயங்குவர் என்றும் அமைச்சர் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது ‘எஸ்ஜி ஒற்றுமை வேலைகள் மற்றும் திறன்கள் தொகுப்பு’ குறித்து துணைப் பிரதமர் அறிவித்தார்.

அதன்படி, இவ்வாண்டில் இளம் சிங்கப்பூர்வாசிகளுக்காக 21,000 வேலைப் பயிற்சி இடங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் இருக்கும் பணியிடைக்கால வேலை தேடுவோருக்கும் மேலும் 4,000 வேலைப் பயிற்சி வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

அண்மைய, புதிய பட்டதாரிகள் அடுத்த மாதம் 1ஆம் தேதியில் இருந்து MyCareers Future.sg இணையவாயில் மூலமாக வேலைப் பயிற்சி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 11,000 வேலைப் பயிற்சி வாய்ப்புகளை வழங்க கடப்பாடு கொண்டுள்ளதாக திருவாட்டி டியோ தெரிவித்தார்.

பணியிடைக்கால ஊழியர்களுக்கான வேலைப் பயிற்சித் திட்டம் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

புதிய பட்டதாரிகளைக் காட்டிலும் பணியிடைக்கால ஊழியர்களுக்கு வேலைப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவது சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் டியோ, அவர்களின் திறமைக்கேற்றபடி நிறுவனங்கள் திட்டங்களை வகுக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பணியிடைக்காலப் பயிற்சித் திட்டங்கள் பெரிய அளவில் இடம்பெறும்போது அவை நிறுவனங்களுக்கும் வேலை தேடுவோருக்கும் வெற்றி தருவதாக அமையும் என்றும் திருவாட்டி டியோ சொன்னார்.

வேலை தேடுவோர், நிறுவனங்களின் இணைப்புத் திட்டங்களில் சேர வாய்ப்புப் பெறும்போது அது வகுப்பறையில் கிடைக்கும் பயிற்சியைக் காட்டிலும் கூடுதல் பலனளிப்பதாக இருக்கும் என்ற அவர், அதே நேரத்தில் நிறுவனங்களுக்கும் திறன்தேர்ச்சி பெற்ற ஊழியர்கள் கிடைப்பர் எனக் குறிப்பிட்டார்.

நிறுவனங்கள் ஏற்கெனவே சிரமப்படும் நிலையில் ஏற்புடைய பயிற்சிக்கால உதவித் தொகையை வழங்குவது மேலும் சிரமமாக இருக்கலாம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

ஆயினும், அந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்கும் என்றும் அவர் சொன்னார்.

இளம் சிங்கப்பூர்வாசிகளுக்குப் வேலைப் பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்குப் பயிற்சிக்கான படித்தொகையில் 80 விழுக்காட்டை சிங்கப்பூர் ஊழியரணி ஏற்றுக்கொள்ளும். எஞ்சிய தொகையைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

அத்துடன், ‘எஸ்ஜி ஒற்றுமை வேலைவாய்ப்புத் திட்டம்’ மூலமாக பொது, தனியார் துறைகள் இணைந்து 40,000த்திற்கும் அதிகமான வேலைகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திறன் பயிற்சித் திட்டங்களும் வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டங்களும் வேலை தேடுவோர் புதிய வேலைகளில் சேர உதவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!