தங்கும் விடுதிகளில் ஏறத்தாழ 80 விதிமீறல்கள்

தங்கும் விடுதிகளில் ஏறத்தாழ 80 விதிமீறல்கள்

2 mins read
dc407957-6b45-466b-823c-0f83fbfa85c0
பொங்கோல் எஸ்11 தங்கும் விடுதியில் இம்மாதம் 21ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் காணப்படும் வெளிநாட்டு ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளிநாட்டு ஊழியர்களுக்காக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டிலும் ஏறத்தாழ 80 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த விதிமீறல்களில் பெரும்பாலானவை சிறிய விதிமீறல்கள் என்று அமைச்சு கூறியது. கண்டுபிடிக்கப்பட்ட விதிமீறல்களில் 60 விழுக்காடு சிறிய விதிமீறல்கள் . தங்கும் விடுதியின் ஒரு பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க தவறியதும் அவற்றில் அடங்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் மனிதவள அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தங்கும் விடுதிகளை நடத்தும் சிலர் பல விதிமுறைகளை மீறியிருப்பது அமைச்சு வெ ளியிட்ட புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20 தங்கும் விடுதிகள் அவற்றின் உரிம நிபந்தனைகளை மீறுவதாக கடந்த மாதம் 4ஆம் தேதியன்று மனிதவள அமைச்சர் ஜோச ஃபின் டியோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள் சட்டத்தின்கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ள 43 தங்கும் விடுதிகளில் ஏறத்தாழ 20 தங்கும் விடுதிகளில் விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளதாக தெ ரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் தங்கும் விடுதியிலும் 1,000 அல்லது அதற்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் தங்கவைக்கப்படலாம்.

"சிறு விதிமீறல்களுக்கு எதிராகவும் மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுக்கும். எனவே , உரிமநிபந்தனைகளைப் பாதிக்கு சற்றே குறைவான தங்கும் விடுதிகள் இதற்குமுன் மீறியிருப்பதில் ஆச்சரியம் இல்லை ," என்று அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

அண்மைய வாரங்களில் வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடங்களின் நிலை குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 90 விழுக்காட்டினர் தங்கும் விடுதிகளில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்காக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளிலும் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள தொழிற்சாலைகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான 150 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன .

இந்தத் தங்கும் விடுதிகளில் நடத்தப்பட்ட 362 சோதனைகளில் இந்த விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. கண்டுபிடிக்கப்பட்ட 150 விதிமீறல்களில் 143 விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மிக மோசமான ஏழு விதிமீறல்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.