புதிதாக 261 பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமையன்று ( ஜூன் 5 ஆம் தேதி) நண்பகல் நிலவரப்படி புதிதாக 261 பேரை கொரோனா கிருமி தொற்றி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 11 பேர் சமூகப் பரவலால் பாதிக்கப்பட்டவர்கள்.

புதிய நோயாளிகளில் அறுவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். ஐவர் வேலை அட்டைதாரர்கள்.  சமூகப் பரவலால் பாதிக்கப்பட்டோரில் ஆறு பேர், கொரோனா இருப்பது  முன்னதாக உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பு இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவத்தது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்நபர்களில் ஒருவர், ஊழியர் தங்கும் விடுதியில் உருவான கிருமித்தொற்றுக் குழுமத்துடன்  தொடர்புடையவர். மற்ற நால்வர் தற்போது கிருமிப்பரவல் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சு கூறியது.

எஞ்சியோர் அனைவரும் வெளிநாட்டு ஊழியர்கள்.   முன்புவிட குறைந்த அளவில் செய்யப்பட்ட  'சுவாப்' சோதனைகள்  வெள்ளிக்கிழமையில் புதிய சம்பவங்கள் குறைந்த எண்ணிக்கையில் பதிவானதற்கு ஒரு காரணம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. அது குறித்து அமைச்சு மேலும் விரிவாக விளக்கம் அளிக்கவில்லை.

புதிய சம்பவங்களுடன் சேர்ந்து சிங்கப்பூரின் ஒட்டுமொத்த கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை 37,183க்கு உயர்ந்துள்ளது.

சமூகப் பரவலால் புதிதாக எந்தச் சம்பவமும் இவ்வாரம் திங்கட்கிழமை பதிவாகவில்லை. ஆனால் அதன் பிறகு சமூகப் பரவலால் ஏற்பட்ட புதிய கிருமித்தொற்றுகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமையன்று நான்காக உயர்ந்தது. அந்த எண்ணிக்கை புதன்கிழமையன்று ஏழுக்கு மேலும் உயர்ந்து வியாழக்கிழமையன்று உச்ச எண்ணிக்கையான பதினைந்தை எட்டியது. அந்தப் 15 பேரில் பதின்மூவர் லிட்டில் இந்தியா வட்டாரத்தின் வீராசாமி ரோட்டிலுள்ள கடை வீடு ஒன்றுடன் தொடர்புடையவர்கள். மற்ற இருவருக்கு சமூகப் பரவலால் கிருமித்தொற்று ஏற்பட்டது. கொரோனா இருப்பதாக முன்னதாகவே உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புப்படுத்தப்பட்ட அவ்விருவரில் ஒருவர் சிங்கப்பூரராகவும் மற்றொருவர் வேலை அட்டைதாரராகவும் உள்ளனர்.