பொது இடங்களுக்கு முகக்கவசம் அணிந்து செல்லவும்: உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய ஊக்குவிக்க வேண்டும் என்று நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்து இருக்கிறது.

பொது இடங்களில் கொவிட்-19 கிருமி தொற்றும் அபாயமுள்ளதால் முகக்கவசம் அணிவது அந்த நோய்ப் பரவலைக் குறைக்க உதவும் என சுகாதார நிறுவனம் தனது புதிய வழிகாட்டி நெறிமுறையில் குறிப்பிட்டுள்ளது.

அண்மைய வாரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில், கொரோனா கிருமி பரவும் அபாயத்தைக் குறைக்க உதவும் பலவிதமான சாதனங்களில் முகக்கவசமும் ஒன்று என்றும் அது தவறான பாதுகாப்பு உணர்வைத் தருவதில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

அதே நேரத்தில், “முகக்கவசங்கள் மட்டுமே ஒருவரை கொரோனா கிருமி தொற்றுவதில் இருந்து பாதுகாத்துவிடாது,” என்று நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுகாதார நிறுவனத்தின் கொவிட்-19 தொழில்நுட்பத் தலைமை நிபுணர் மரியா வான் கெர்கோவ், “பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லும்படி ஊக்குவிக்க வேண்டும் என்று அரசாங்கங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். அதிலும் குறிப்பாக, மருத்துவ முகக்கவசம் அல்லாது, துணியாலான முகக்கவசத்தை அணியுமாறு பரிந்துரைக்கிறோம். முகக்கவசத்தை முறையாக அணிவது ஒரு தடுப்பரணாக விளங்கும். கிருமித்தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் சிறு துளிகள் நம்மை அண்ட விடாமல் அது பாதுகாக்கும் என்பதைப் புதிய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன,” என்று  விளக்கினார்.

விரிவான தகவல் நாளைய தமிழ் முரசில்...