பிரதமர், முக்கிய அமைச்சர்கள் உரை

கொவிட்-19க்குப் பின் சிங்கப்பூரின் எதிர்காலம்

இன்று தொடங்கி இம்மாதம் 20ஆம் தேதி வரை பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் மற்றும் பல அமைச்சர்கள் மக்கள் முன் உரையாற்றவிருக்கின்றனர்.

இந்த தேசிய ஒலிபரப்புத் தொடரில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பின் சிங்கப்பூரின் எதிர்காலம் எப்படி இருக்கும், தங்களின் திட்டங்கள் ஆகியவை குறித்து அவர்கள் உரையாற்றுவர்.

சிங்கப்பூரர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதுகாப்பாக வாழும் வகையில் நீண்டகாலத்திற்கு கொவிட்-19 உடன் வாழ செய்ய வேண்டியது என்ன, மாறிவரும் புவிசார் அரசியல் சூழலுக்கு இடையே உலக அரங்கில் சிங்கப்பூர் தனது நிலையைக் கட்டிக்காப்பது எப்படி, வர்த்தகங்கள் செழிப்புறவும் நல்ல வேலைகளை உருவாக்கவும் நாட்டின் பொருளியலைப் போட்டித்தன்மைமிக்கதாக வைத்திருப்பது எப்படி, எல்லா சிங்கப்பூரர்களும் வெற்றிபெறவும் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரை நன்கு கவனித்துக்கொள்ளவும் ஏதுவாக நம்பிக்கையளிக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி, இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வலுவானவர்களாக உருவெடுக்க இணைந்து பணியாற்றுவது எப்படி போன்ற அம்சங்கள் குறித்து தலைவர்கள் பேசுவர்.

தலைவர்களின் உரை இரவு 7.30 மணிக்கு சேனல் நியூஸ் ஏஷியா (ஆங்கிலம்), இரவு 8.30 மணிக்கு ஒளிவழி 5 (ஆங்கிலம், சைகை மொழி), இரவு 9 மணிக்கு வசந்தம் (தமிழ்) ஒளிவழிகளில் ஒளிபரப்பப்படும்.

இதே நேரங்களில் அந்தந்த மொழி வானொலியிலும் உரை ஒலிபரப்பப்படும்.

அரசாங்கத்தின் Gov.sg இணையத்தளத்திலும் ஃபேஸ்புக், யூடியூப், டுவிட்டர் ஆகிய சமூக ஊடகப் பக்கங்களிலும் தலைவர்களின் உரைகளைக் கேட்கலாம்.

அத்துடன், பிரதமர், துணைப் பிரதமரின் உரைகளை அவர்களின்  ஃபேஸ்புக் பக்கம் மூலமாகவும் பிரதமர் அலுவலகத்தின் யூடியூப் ஒளிவழி வழியாகவும் கேட்கலாம்.