முரசொலி: வாக்கை காப்போம்; வாழ்வோம் வாழவைப்போம்

சிங்கப்பூரில் பொருளியல் தேவைக்கு ஏற்ப பல நாடுகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.

சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் செய்யத் தயங்குகின்ற, பார்க்க முன்வராத பல வேலைகளைச் செய்து ஊழியர் பற்றாக்குறையை ஈடு செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள், சிங்கப்பூரின் நிலையை உயர்த்துவதோடு தங்கள் தாயகங்களில் வசிக்கும் தங்கள் உறவினர்களையும் குடும்பத்தாரையும் வாழவைத்து வருகிறார்கள்.

வெளிநாட்டு ஊழியர்கள் இல்லை என்றால் இங்கு உயிர்நாடியான பல பணிகள் நிலைகுத்திப்போய்விடும் என்பதை சிங்கப்பூரர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலவரம். இத்தகைய ஊழியர்களின் உரிமைகளை, நல்வாழ்வை, உடல்நலனைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாகவும் சிங்கப்பூரர்கள் உறுதுணையாகவும் இருந்து வருகிறார்கள்.

இத்தகைய ஊழியர்களின் நலன் பேண அரசு சாரா அமைப்புகளும் இருக்கின்றன.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உரியவற்றுள் ஒன்றாக அவர்களுக்கென்றே திட்டமிடப்பட்டு பல்வேறு வசதிகளுடன் பிரத்தியேக விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன.

தொழிற்சாலை போன்ற இடங்கள் விடுதியாக மாற்றப்பட்டு அவற்றிலும் அத்தகைய ஊழியர்கள் வசித்து வருகிறார்கள்.

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அப்போதைக்கு அப்போது விடுதிகளின் நிலவரங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் சிங்கப்பூரில் இடப் பற்றாக்குறை இருப்பதால் ஒரே இடங்களில் வெளிநாட்டு ஊழியர்களை நெருக்கமாக தங்கி வசிக்க வேண்டிய சூழல் தவிர்க்க முடியாததாக உள்ளது. சிங்கப்பூரில் கொரோனா கிருமி தொற்றியோரில் மிகப் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு ஊழியர்களாக இருப்பதற்கு இது ஒரு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இத்தகைய விடுதிகளில் உள்ள குறைபாடுகளைக் களைந்து புதிய விடுதிகளை உருவாக்கி வெளிநாட்டு ஊழியர்கள் பல இடங்களிலும் பரந்து வசிப்பதை உறுதிப்படுத்த பெரும் திட்டத்தை சில நாட்களுக்கு முன் அரசாங்கம் அறிவித்தது.

அந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக சுமார் 60,000 திடீர் படுக்கை இடங்கள் இந்த ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எதிர்காலத்தில் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கொரோனா போன்ற கிருமித்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகளைக் குறைக்கும் வகையிலும் அப்படி தொற்று ஏற்பட்டால் அதை விரைவாக முறியடிக்கும் வகையிலும் புதிய விடுதிகள் அமைக்கப்படும்.

அரசாங்கம் மேற்கொள்ளும் இத்தகைய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு தரவேண்டிய கடமையும் பொறுப்பும் சிங்கப்பூரர்களுக்கு இருக்கிறது என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஆனால் இதனைச் செய்ய வேண்டுமானால் ஒரு புதிய சமூக முன்மாதிரியும் மனப்போக்கும் தேவைப்படுகிறது என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்கது. அந்தச் சமூக முன்மாதிரியில் எல்லாரையும் உள்ளடக்கும் அணுகுமுறை மேலோங்கியதாக இருக்கும்.

அதேவேளையில், சிங்கப்பூரர்களுக்குத் தேவையான மனப்போக்கில் கருணை குடிகொண்டிருக்க வேண்டும்.

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே சில வெளிநாட்டு ஊழியர் விடுதிகள் அமையலாம். அத்தகைய குடியிருப்பு இடங்களில் இருக்கும் பயன்படுத்தப்படாத அரசு கட்டடங்கள் தற்காலிக வெளிநாட்டு ஊழியர் தங்கும் இடங்களாகப் பயன்படுத்தக்கூடிய நிலையும் ஏற்படலாம். முன்னாள் பள்ளிக்கூடங்கள், காலியான தொழிற்சாலைகள் போன்ற இத்தகைய இடங்கள் பல குடியிருப்புப் பகுதிகளின் மைய இடங்களில் அமைந்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்க வைக்கப்படும்போது அவர்கள் நேரடியாகச் சமூகத்துடன் தொடர்புகொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்படும். இத்தகைய ஒரு நிலை, ஒரு பிரிவு சிங்கப்பூரர்களுக்குக் கசப்பாக இருக்கக்கூடும்.

இந்தப் பிரிவு சிங்கப்பூரர்கள் வெளிநாட்டு ஊழியர்களை மட்டுமின்றி ஏதோ ஒரு காரணத்திற்காக தங்கள் பகுதிக்குள் வரும் யாரையும் ஏற்றுக்கொள்ள தயங்குபவர்களாக இருக்கிறார்கள்.

பீஷான், உட்லண்ட்ஸ், ஜாலான் பத்து போன்ற பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் 2012ல் தங்கள் வசிப்பிடத்தில் முதியோர் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

அப்படி எதிர்ப்பு தெரிவித்தவர்கள், முதியோர் பராமரிப்பு நிலைய வசதிகள் தங்கள் மத்தியில் இருக்கும் முதியவர்களுக்கும் உதவும் என்பதால் அவை முக்கியம் என்பதை பின்னர் உணர்ந்துகொண்டனர்.

பலவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகு அவர்கள் இறுதியில் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.

இத்தகைய ஒரு கசப்பான மனப்போக்கு என்பது, ஒரு சமூகம் என்ற முறையில் சிங்கப்பூருக்கு ஒத்துவராது என்பதை மக்கள் உணரவேண்டும்.

வெளிநாட்டு ஊழியர்கள் நமக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் அவர்களின் வசிப்பிட சூழ்நிலையை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் மக்களில் பலரும் ஏற்றுக்கொண்டு இருப்பதைப் போன்ற ஒரு மனநிலையே இதில் சிறந்த அணுகுமுறையாக இருக்க முடியும், இருக்க வேண்டும்.

ஆகையால் வெளிநாட்டு ஊழியர்களின் வசிப்பிட சூழலை மேம்படுத்த அரசாங்கம் எடுக்கும் பெரிய முயற்சிக்கு சிங்கப்பூரர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். எல்லாரையும் உள்ளடக்கிய சமூகம் என்ற சொல் செயலாக வேண்டும்.

அரசாங்கம் அறிவித்துள்ள புதிய விடுதிகளுக்கான திட்டங்கள், இன்னும் சகிப்புத்தன்மையுடன் கூடிய, எல்லாரையும் உள்ளடக்கக்கூடிய சமூகத்தைச் சாதிக்கத் தேவையான முக்கியமான, அவசியமான ஒரு வழி தான் என்பதை மக்கள் உணர வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!