அண்டை நாடுகளுடன் அணுக்க உறவு

சிறிய நாடாக இருந்தபோதும், கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பிந்திய உலகில், சிங்கப்பூர் தனது அரசியல், பொருளியல் நிலைப்பாட்டை நிலைநிறுத்த எண்ணம் கொண்டுள்ளது என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்து விவரித்த அவர், வட்டார அளவில் நல்ல பங்காளியாகத் திகழவும் பங்களிப்பை வழங்கவும், குறிப்பாக மலேசியா, இந்தோனீசியாவுடனான உறவுகளை மேம்படுத்தவும் சிங்கப்பூர் விரும்புவதாக திரு டியோ கூறினார்.

அனைத்துலக ஒத்துழைப்பைப் பொறுத்தமட்டில், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளும் குரல் கொடுக்க முடியும், தீவிரமாகப் பங்காற்ற முடியும் என்று அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.

அதற்கு, சிங்கப்பூர் முன்னெடுத்துள்ள அல்லது பங்கெடுத்து வரும் பல்வேறு பலதரப்பு பங்காளித்துவங்களை அவர் சுட்டிக் காட்டினார்.

கொரோனா கிருமித்தொற்றுக்குப் பிந்திய சிங்கப்பூரின் எதிர்காலம் தொடர்பான அமைச்சர்களின் தேசிய ஒலிபரப்புத் தொடரில் நேற்று மூன்றாவதாக தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோவின் உரை ஒலிபரப்பப்பட்டது.

பெரிய அண்டை நாடுகளுக்கு மத்தியில், சிறிய, பல இன மக்களைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் எப்போதும் திகழும் எனக் குறிப்பிட்ட அவர், அதே நேரத்தில் நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திகளால் நாம் பாதிக்கப்படக்கூடும் என்றும் சொன்னார்.

ஆயினும், வட்டார நல்லிணக்கத்திற்குப் பங்களிக்க சிங்கப்பூர் விரும்புகிறது என்றார் திரு டியோ.

“கொரோனா தொற்றை எதிர்கொள்வதையும் தாண்டி, நமது ஆசியான் பங்காளிகளுடன், குறிப்பாக மலேசியாவுடனும் இந்தோனீசியாவுடனும் நெருக்கமான உறவுகளையும் ஒத்துழைப்பையும் கட்டிக்காப்போம்,” என்று அவர் கூறினார்.

குறிப்பாக, கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே மக்கள் நடமாட்டம், பொருள் விநியோகம் தொடர்பில் மலேசியாவுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாக அமைச்சர் டியோ சொன்னார்.

அதே வேளையில், நெருங்கிய அண்டை நாடுகளுக்கு இடையே எழும் தவிர்க்க முடியாத இருதரப்பு விவகாரங்களை ஆக்கபூர்வமாகக் கையாள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“அந்த விவகாரங்களுக்குத் தீர்வு காணவும் இருதரப்பிற்கும் பயனளிக்கக்கூடிய, அதே நேரத்தில் சிங்கப்பூரின் நலன்களைப் பாதுகாக்கும் முடிவுகளை எடுக்க எங்களால் முடிந்த அளவிற்கு முயல்வோம்,” என்றார் திரு டியோ.

உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பல விவகாரங்களைச் சுட்டிய அவர், இந்தக் கிருமித்தொற்றுக் காலகட்டத்திலும்கூட இந்த வட்டாரத்தையும் தாண்டி, அனைத்துலக அரங்கிலும் பலன் தரத்தக்க வகையில் பங்களிக்க சிங்கப்பூர் முயல்வதாக அவர் தெரிவித்தார்.

உலக அறிவுசார் சொத்து நிறுவனத்தின் தலைமை இயக்குநராக திரு டேரன் டாங் தேர்வுசெய்யப்பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டார். ஐநா அமைப்பு ஒன்றுக்கு சிங்கப்பூரர் ஒருவர் தலைமையேற்க இருப்பது இதுவே முதன்முறை.

சிறு தீவாக இருந்தபோதிலும் பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்காக கூட்டு நடவடிக்கையில் சிங்கப்பூர் பங்களித்து வருவதையும் அமைச்சர் டியோ சுட்டினார்.

கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பில் மேம்படுத்தப்பட்ட அறிக்கையை பருவநிலை மாற்றத்திற்கான ஐநா உடன்படிக்கைக் குழுவிடம் தாக்கல் செய்துள்ளதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

“இவையெல்லாம் எதிர்கால உலகைத் தீர்மானிக்கும் முக்கிய விவகாரங்கள்,” என்றார் அவர்.

தேசிய ஒலிபரப்புத் தொடரில் அடுத்ததாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கின் உரை நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஒலிபரப்பாகும்.

மூத்த அமைச்சர் டியோ: சிங்கப்பூர் நல்ல பங்காளியாகத் திகழவும் பங்களிப்பை வழங்கவும் விரும்புகிறது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!