சமூகப் பரவல் மூலம் 18 பேருக்கு கொரோனா

1 mins read
133d05bc-eabd-4833-bff3-78fbc0e31050
-

சிங்கப்பூரில் இன்று புதிதாக 463 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து, இங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 39,850ஐ எட்டியுள்ளது. சமூக அளவில் 18 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் எண்மர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள். எஞ்சிய 10 பேர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவர்களில் ஐவர், முன்னதாக கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்புடையவர்கள். அந்த ஐவரும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக அமைச்சு கூறியது.

அத்தியாவசிய சேவை துறைகளில் பணிபுரிவோர், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வேலை செய்வோர் ஆகியோரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் ஐந்து பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

சமூக அளவில் பாதிக்கப்பட்ட எஞ்சிய எட்டு பேருக்குக் கிருமி எவ்வாறு தொற்றியது என்பது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் என அமைச்சு கூறியது. இந்நிலையில், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட 422 கிருமித்தொற்று சம்பவங்கள் குறித்த மேல் விவரங்களை அமைச்சு அன்றிரவு வெளியிட்டது. சமூக அளவில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட ஐவரில் நால்வரிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. அவர்களிடம் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே தொற்று உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.