சுடச் சுடச் செய்திகள்

நடுத்தர வயது, மூத்த ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு ஆதரவு

நடுத்தர வயது மற்றும் மூத்த சிங்கப்பூரர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள், அரசாங்கத்திடமிருந்து கூடுதல் ஆதரவைப் பெறுவர் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில், புதிய பணியிடைக்கால வேலைவாய்ப்புத் திட்டம் மேம்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் நடுத்தர வயது மற்றும் மூத்த ஊழியர்கள்  நிறுவனங்களிலும் பொதுச் சேவை அமைப்புகளிலும் வேலை செய்ய வாய்ப்புகளைப் பெறலாம். 
எதிர்காலத்தில் மேலும் நிரந்தரமான வேலைகளுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளலாம் என்றார் அவர்.

மேலும் வலுவான, ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக்குவது தொடர்பிலான தேசிய ஒளிபரப்புத் தொடரில் இன்று (ஜூன் 17) உரையாற்றிய சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன், நடுத்தர வயது, முதிர்ச்சியடைந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் முதலாளிகளுக்கு புதிய கண்ணோட்டம் தேவை என்று வலியுறுத்தினார்.

இந்தப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டால், அனைவரும் பலனடைவர் என்று அவர் சொன்னார்.

1960களின் பிற்பாதியில் பிரிட்டிஷார் சிங்கப்பூரிலிருந்து தமது துருப்புகளை மீட்டுக்கொண்டபோதும், 1980களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட பொருளியல் மந்தநிலையின்போதும் இருந்ததைக் காட்டிலும், சிங்கப்பூரில் ஊழியரணி இப்போது மேலும் முதிர்ச்சி அடைந்து  உள்ளதை திரு தர்மன் சுட்டினார்.

அந்தக் காலகட்டத்தில், ஊழியரணியில் 30 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே 40 வயதைக் கடந்தவர்களாக இருந்தனர். இப்போது, அந்த விகிதம் முன்பு இருந்ததைவிட இரு மடங்காகி, 60 விழுக்காடாக உள்ளது. இன்றைய ஊழியர்களில் பலர் 50 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர்.

எனவேதான், நடுத்தர வயது, முதிர்ச்சியடைந்த சிங்கப்பூர் ஊழியர்களுக்கு உதவ  ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுவதாக திரு தர்மன் சொன்னார்.

“இது ஒரு தேசிய அளவிலான முயற்சி. அவ்வாறே அது இருக்க வேண்டும்.  நடுத்தர வயது, முதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த, நியாயமான வாய்ப்பை வழங்குவது குறித்து முதலாளிகளிடையே புதிய கண்ணோட்டம் தேவை,” என்றார் அவர்.

“கற்றுக்கொள்ள தயாராக இருக்கும் எந்தவொரு சிங்கப்பூரரும் பணியமர்த்தப்படுவதற்கு முதிர்ந்தவர் அல்ல. தம்மை மாற்றி அமைத்துக்கொள்ள  தயாராக இருக்கும் எவரும், பணிக்குத் தேவையான தகுதிகளை மிஞ்சியவராகக் கருதப்படக்கூடாது,” என்றும் திரு தர்மன் கூறினார்.

நிறுவனங்களின் ஆட்சேர்ப்புச் செயல்பாடுகள் நியாயமான பரிசீலனைக் கட்டமைப்புக்கு உட்பட்டிருப்பதை உறுதிசெய்வதையும் மனிதவள அமைச்சு கண்காணிக்கும் என்றார் அவர்.

வேலைகளைக் காப்பாற்றுவதற்கும் மக்கள் நீண்டகாலம் வேலையில்லாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் சொன்னார்.

இதற்கு முன்னரும், வேலையின்மை அதிகமாக இருந்த சூழல்களை சிங்கப்பூர் சந்தித்ததாகக் கூறிய திரு தர்மன், இந்தச் சவாலை எதிர்கொள்ள இன்று நாம் மேலும் வலுவான நிலையில் இருப்பதாகச் சொன்னார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon