ஆண்டின் நடுப்பகுதியில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் கிடையாது; சிலருக்கு சம்பள வெட்டு

இவ்வாண்டின் நடுப்பகுதியில் சிங்கப்பூரில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படாது என்று பொதுச் சேவைத் துறை அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 85,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். 

கொரோனா கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூரின் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.

அதுமட்டுமல்லாது, ‘சூப்பர் ஸ்கேல்’ பிரிவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அரை மாத அல்லது ஒரு மாத சம்பள வெட்டு இருக்கும். அவரவர் பணி மூப்பைப் பொறுத்து சம்பள வெட்டு அளவு நிர்ணயிக்கப்படும். 

முக்கிய தலைமைப் பதவிகளில் இருக்கும் மூத்த பொதுச் சேவை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அரை மாதச் சம்பள வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஆண்டிறுதி போனஸ் குறித்து முடிவெடுக்கும்போது குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொள்ளும் வகையில் தேசிய சம்பள மன்றம் முன்வைக்கும் பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்று பொதுச் சேவைத் துறை கூறியது.

கடந்த ஆண்டு நடுப்பகுதியில் அரசு ஊழியர்களுக்கு 0.45 மாத ஊக்கத்தொகையும் (போனஸ்) கூடுதலாக $200யும் வழங்கப்பட்டது.

குறைந்த 'கிரேட்' ஊழியர்களுக்கு $300 வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியில் அரசு ஊழியர்களுக்கு 0.1 மாத ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இதுவே கடந்த பத்து ஆண்டுகளில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஆகக் குறைவான ஆண்டிறுதி ஊக்கத்தொகை ஆகும். 

கடந்த ஆண்டிறுதியில் அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக $250லிருந்து $1,500 வரை வழங்கப்பட்டது. 

இந்த நெருக்கடிமிக்க காலகட்டத்தில் சிங்கப்பூரர்கள் பலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாகவும் பலரது சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் சேவைக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.

பொதுச் சேவை அதகிகாரிகளின் கடுமையான உழைப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online