சுடச் சுடச் செய்திகள்

7 தொழில்துறைகளில் கவனம் செலுத்த புதிய குழுமங்கள்

சிங்கப்பூரில் புதுப்புது திட்டங்களுக்கான யோசனைகளைத் தீட்டவும் புதிய வேலைகளை உருவாக்கவும் மிக முக்கியமான ஏழு வளர்ச்சி துறைகளில் தொழில்துறை தலைமையிலான குழுமங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று (ஜூன் 200 தெரிவித்தார். 

‘சிங்கப்பூர் ஐக்கிய செயல்  குழுமம்’ என்று குறிப்பிடப்படும் அந்த அமைப்புகள் தொழில்துறையினருக்கும் அரசுக்கும் இடைப்பட்ட பங்காளித்துவ உறவின் அடிப்படையில் அமைந்திருக்கும். 

நாட்டின் பொருளியலை வளர்க்கும் முயற்சியாக புதுப்புது யோசனைகளை வேகமாகச் செயல்படுத்துவது அந்த குழுமங்களின் நோக்கம். கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பிறகு ஏற்படக்கூடிய புதிய வாய்ப்புகளை சிங்கப்பூர் பயன்படுத்திக்கொள்ள உதவும் வகையில் அரசாங்கம் மே மாதம் சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்தது. 

அந்தப் பணிக்குழு இந்தத் தொழில்துறைக் குழுமங்களை ஏற்படுத்தி இருக்கிறது. 

கொவிட்-19க்குப் பிறகு சிங்கப்பூரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றி அரசாங்கத் தலைவர்கள் தொடர்ச்சியாக உரையாற்றி வருகிறார்கள். 

துணைப் பிரதமர் திரு ஹெங் நேற்று அந்த வரிசையில் ஆறாவது உரையை ஆற்றினார். 

யோசனைகளை வேகமாக செயலாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளின்போது இந்தச் சிறப்புப் பணிக்குழு சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவுகளையும் சேர்ந்த மக்களை கலந்து ஆலோசித்து வருகிறது என்பதை நிதி அமைச்சருமான திரு ஹெங் சுட்டினார். 

புதிதாக அமைக்கப்பட்டு உள்ள தொழில்துறைக் குழுமங்கள் வரும் மாதங்களில் ஏழு துறைகளில் புதுப்புது யோசனைகளைக் கண்டறியும் என்றும் அவர் கூறினார். 

இயந்திர மனிதன், கணினி வர்த்தகம், சுற்றுச்சூழல் வளம், விநியோக ஏற்பாடுகளை மின்னிலக்கமயப்படுத்துவது, வசிப்பிடச் சூழல், கல்வி தொழில்நுட்பம், பாதுகாப்பான சுற்றுலாத் துறை ஆகியவை அந்தத் துறைகள். 

இந்தப் புதிய  குழுமங்கள் மூன்று மாத காலத்தில் புதிய யோசனைகளை உருவாக்கும். பிறகு அவற்றை அவை பகிர்ந்து கொள்ளும். 

அவற்றின் அடிப்படையில் எந்தெந்த திட்டங்களில் ஒருமித்த கவனம் செலுத்தலாம் என்பதை சிறப்புப் பணிக்குழு முடிவு செய்யும்.  

முக்கியமான ஏழு துறைகளை விளக்கிய சிறப்புப் பணிக்குழு,  மின்னிலக்கமயம் தொழில்துறை உருமாற்றத்தின் முக்கிய அங்கமாக இருந்து வந்திருப்பதைச் சுட்டியது. 

இரண்டாவது குழுமம் கல்வித் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும். மூன்றாவது குழுமம் சுற்றுலாத் துறையிலும் நான்காவது குழுமம் அறிவார்ந்த வர்த்தக முறையை உருவாக்குவதிலும் ஒருமித்த கவனம் செலுத்தும். 

ஐந்தாவது குழுமம் இயந்திர மனிதத் துறையிலும் ஆறாவது குழுமம் பொருள் விநியோக சங்கிலி ஏற்பாட்டை மின்னிலக்கமயமாக்குவதிலும் கவனம் செலுத்தும். 

ஏழாவது குழுமம் பொருளியல் வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல், சமூக ஆளுமைத் தரங்களையும் கட்டிக்காப்பதில் கவனம் செலுத்துமென சிறப்புப் பணிக்குழு தெரிவித்தது.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon