ரயில் கட்டமைப்பு கட்டுமானங்கள் தாமதம்

கொவிட்-19 நோய்ப் பரவல் பாதிப்பால் சிங்கப்பூரில் ரயில் கட்டமைப்பை 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக விரிவுபடுத்துவதற்கான திட்டம் தாமதிக்கப்படும்.
இருந்தபோதும், 2030களின் முற்பகுதிக்குள் இந்த இலக்கை அடைய சிங்கப்பூர் முற்படும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்துள்ளார்.

“கொவிட்-19 நோய்ப் பரவல் சூழல், கட்டுமானத் துறை ஊழியர்களின் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பணியைச் செய்வதில் தாமதம் ஏற்படும்.  

“ஆனால், எம்ஆர்டி கட்டமைப்பை குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கம் செய்யும் குறிக்கோளில் எந்த மாற்றமும் இல்லை,” என்று திரு கோ இன்று (ஜூன் 22) தெரிவித்தார்.  
இந்தத் தாமதம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பற்றி அவர் விவரிக்கவில்லை.

சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பின் நீளம் தற்போது சுமார் 230 கிலோ மீட்டராக உள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் இது 360 கிலோ மீட்டராக விரிவுபடுத்தப்பட இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. இதன் மூலம், 10ல் எட்டு குடும்பங்கள் 10 நிமிடங்களுக்குள் ரயில் நிலையத்தைச் சென்றடையலாம்.

அடுத்த பத்தாண்டு காலகட்டத்தில் கட்டி முடிக்கப்படவிருந்த ரயில் பாதைகளில் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட், ஜூரோங் வட்டாரப் பாதைகளின் எஞ்சிய கட்டங்களும் குறுக்குத் தீவுப் பாதையின் முதற்கட்டமும் அடங்கும்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் இரண்டாவது கட்டம் இவ்வாண்டு பிற்பகுதியில் முடிவடைய இருந்தது. உட்லண்ட்ஸ் நிலையத்தை மேஃபிளவர் நிலையம் வழியாக கேல்டிகாட் நிலையத்துடன் அது இணைக்கும்.
வட்டப் பாதை, டௌன்டவுன் பாதை, வடக்கு கிழக்குப் பாதை ஆகியவற்றிலும் அடுத்த பத்தாண்டுகளில் கூடுதலான நிலையங்கள் கட்டப்பட இருந்தன.

கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் காரணமாக பொதுப் போக்குவரத்து பயன்பாடு தற்போது குறைந்தாலும், காலப்போக்கில் அதற்கான தேவை முன்புபோல உயரும் என்று திரு கோ விளக்கினார்.

கிருமித்தொற்றை முறியடிக்கும் கட்டுப்பாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்டமாக தளர்த்தப்பட்டது. அதையடுத்து, கொவிட்-19க்கு முன்பிருந்த நிலையைவிட தற்போது பொதுப் போக்குவரத்தில் பயணங்கள் சுமார் 60 விழுக்காடு குறைந்துள்ளது.

சிங்கப்பூரில் முதன்முதலாக இயங்கத் தொடங்கிய ரயில்களைச் சேவையிலிருந்து நீக்கும் திட்டத்தைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி ஒன்று இன்று பீஷான் ரயில் பணிமனையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோது திரு கோ மேற்கூறப்பட்ட விவரங்களைத் தெரிவித்தார்.