போக்குவரத்து நிலையங்களில் முகம் பார்த்து உடல் வெப்பநிலையைக் காட்டும் இயந்திரங்கள்

எம்ஆர்டி, பேருந்து நிலையங்களில் தானியங்கி உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் இயந்திரங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை நாம் தொட்டுப் பார்க்கத் தேவையில்லை. நமது முகத்தைக் காட்டினால் போதும் நமது உடல் வெப்பநிலை என்ன என்பதைக் காட்டிவிடும்.

கொவிட்-19 பாதிப்பிலிருந்து தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளோரையும் பாதுகாக்கும் வகையில் மக்கள் தங்கள் உடல் வெப்ப நிலையைப் பரிசோதிப்பதை ஊக்கு விக்கும் வகையில் இந்தத் திட்டம் நடப்புக்கு வருகிறது.

கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ‘எஸ்ஜி யுனைடெட்’ முன்னெடுக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று என்று கலாசார, சமூக மற்றும் இளையர் அமைச்சு நேற்று தெரிவித்தது.

இந்தத் தானியங்கி இயந்திரத்தின் முன்னால் பயணிகள் தங்கள் தலைப்பகுதியைக் காட்டியவாறு நின்றால், அவர்களது நெற்றியில் உள்ள வெப்ப அளவை தானியங்கி இயந்திரம் அதன் வெப்ப உணர் கருவி மூலம் அறிந்து அதன் திரையில் துல்லியமான வெப்ப அளவை வெளிப்படுத்தும்.

பயனாளருக்குக் காய்ச்சல் இல்லையெனில் அந்தக் கருவியில் பச்சை ஒளி மிளிரும். காய்ச்சல் இருந்தால் ஆரஞ்சு நிற ஒளி மிளிரும். அவ்வாறு எந்தவொரு பயணிக்காவது காய்ச்சல் இருப்பது அறியப்பட்டால் அந்தப் பயணி இன்னொரு உடல் வெப்பமானி மூலம் அவரது உடல் வெப்பநிலையைச் சோதிக்க வேண்டும். காய்ச்சல் அல்லது உடல் நலக்குறைவாக இருப்பதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

இந்தத் தானியங்கி உடல் வெப்பநிலை இயந்திரங்கள் இப்போது பிராடல், பூன் கெங், தியோங் பாரு ஆகிய எம்ஆர்டி நிலையங்களிலும் புக்கிட் பாஞ்சாங், சிராங்கூன் பேருந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் 70 இடங்களில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்படும். இந்தத் தானியங்கி இயந்திரங்கள் ஓராண்டுக்குச் சேவையில் இருக்கும்.

கலாசார, சமூக மற்றும் இளையர் அமைச்சு, நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் தற்காப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகவை ஆகிய அமைப்புகள் உள்ளூர் நிறுவனமான ‘ஹோப் டெக்நிக்’ நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தைத் தயாரித்துள்ளன.

பொதுப் போக்குவரத்தில் இவ்வாறு வெப்பநிலையைப் பரிசோதிப்பது கட்டாயம் இல்லை. எனினும், நாள்தோறும் நமது உடல் வெப்பநிலையைப் பரிசோதித்து கொவிட்-19 தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க விழிப்புடன் இருப்போம் என்கிறது கலாசார, சமூக மற்றும் இளையர் அமைச்சு.