உலகில் கொரோனா கிருமித்தொற்று எண்ணிக்கை 10 மி. கடந்தது 

உலக கொரோனா கிருமித் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 10 மில்லியனைக் கடந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் கணக்கெடுப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை ஏழு மாதங்கள் உலகம் முழுவது பரவிய இந்நோயால் கிட்டத்தட்ட பாதி மில்லியன் பேர் மடிந்துள்ளனர்.

நோய்க்கான தடுப்பூசி வெளிவர ஓராண்டுக்கு மேலாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நேரத்தில் பல்வேறு நாடுகளின் இயல்பான வாழ்க்கை முறை மாறியுள்ளது. சில நாடுகளில் தளர்த்தப்பட்ட மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடுகள், அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மீண்டும் செயல்படுத்தப்பட்டன.

இந்நோய்ப்பரவல் இப்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவும் பிரேசிலும் நாளுக்கு 10,000க்கும் அதிகமான புதிய நோய்ச்சம்பவங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளன. 

சீனா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நோய்ப்பரவல் சமூகப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் புதிய சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகின்றன.

கிட்டத்தட்ட 2.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் நோய்ப்பரவலின் வேகம் மே மாதத்தில் சற்று தணிந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக விவசாயப் பகுதியில் நோய்ப்பரவல் மீண்டும் வேகமடைந்துள்ளது.

--