கொவிட்-19 : தடுப்பூசி மருந்து தொடர்பில் பிரதமர் உறுதி

கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பூசி மருந்தை உருவாக்கி அதை உலக மக்களுக்கு விரைவாகவும் நியாயமாகவும் விநியோகிக்க சிங்கப்பூர் பலதரப்புகளுடன் இணைந்து செயல்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். கொவிட்-19 கிருமிக்கு எதிரான போராட்டத்தில் பல தரப்புகளின் முயற்சியில் தடுப்பூசி உருவாக வேண்டியதன் முக்கியத்துவத்தையும் திரு லீ வலியுறுத்திப் பேசியிருந்தார்.

‘குளோபல் சிட்டிசன்’ இயக்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த ‘உலகளாவிய குறிக்கோள்: நம் எதிர்காலத்திற்கு இணைவோம் உறுதிமொழி மாநாடு’ மெய்நிகர் நிகழ்வில் பிரதமர் லீ இவ்வாறு தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்று தம் ஃபேஸ்புக் பக்கத்திலும் இதன் தொடர்பில் பதிவிட்ட பிரதமர் லீ, கிருமி தொடர்பில் சிங்கப்பூர் எடுத்து வரும் முயற்சிகளைச் சுட்டினார். மிரட்டல் அளித்து வரும் கொவிட்-19 கிருமியைப் பற்றி மேலும் நன்றாகப் புரிந்துகொள்ள கிருமி தொடர்பான தரவுகளை சிங்கப்பூர் சேகரித்து வருவதுடன் அத்தரவுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
“ஆனால் நமது தனிப்பட்ட முயற்சிகள் மட்டும் போதாது. அனைத்துலக அளவில் அச்சுறுத்தும் இந்தத் தொற்றுநோய்க்கு அனைத்துலக அளவில் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவைப்படுகிறது. குறிப்பாக அறிவியல் ஆராய்ச்சியிலும் அரசாங்கச் செயல்பாட்டிலும் அது அவசியம்,” என்று தம் பதிவில் திரு லீ குறிப்பிட்டிருந்தார்.

“தடுப்பூசி மருந்துக்கான தேடல் பணி சில காலம் பிடித்தாலும் கொவிட்-19 நெருக்கடியை ஒன்றாகச் சமாளிக்கும் நம் வாய்ப்புகளை நாம் முடிந்த அளவுக்கு அதிகரித்துக்கொள்ள வேண்டும்,” என்றார் அவர். தடுப்பூசி மருந்துகளை சிங்கப்பூர் உருவாக்கவும் அவற்றை நியாயமான முறையில் அனைத்து நாட்டு மக்களுக்கும் விரைவாகச் சென்று சேர்க்கவும் ஐரோப்பிய ஆணையம், உலகச் சுகாதார நிறுவனம், ‘கொலிஷன் ஃபோர் எபிடமிக் ப்ரிபேர்ட்னெஸ் இன்னோவேஷன்ஸ்’ என்ற கூட்டணி அமைப்பு, ‘கேவி தி வேக்சின் எலாயன்ஸ்’ அமைப்பு ஆகியவற்றுடன் பணியாற்ற விரும்புவதாக திரு லீ பகிர்ந்து கொண்டார். அத்துடன் சிங்கப்பூரைப் போன்று ஒத்த சிந்தனையுடைய நாடு களுடனும் இணைந்து செயல்பட அவர் விருப்பம் தெரிவித்தார்.
கொவிட்-19 தொடர்பான பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பூசி மருந்துகள் ஆகியவற்றை உருவாக்கவும் உற்பத்தி செய்யவும் விநியோகிக்கவும் உதவும் திட்டத்திற்கு அனைத்துலக ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்றும் அவர் சுட்டினார்.

“இதற்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்கும் வரை, கொவிட்-19 கிருமி தாக்கியுள்ள இக்காலகட்டத்திற்கு முந்திய நாட்களுக்கு நாம் மீண்டும் திரும்புவது சாத்தியமில்லை,” என்றார் அவர்.

மெய்நிகர் மாநாட்டில், “தற்போதைய தலைமுறையினர் இந்த கொவிட்-19 நெருக்கடியை எதிர்கொண்டு மேலும் வலுபெற்று மீண்டு வருவர்,” என்ற நம்பிக்கையளிக்கும் சொற்களுடன் திரு லீ தம் உரையை முடித்திருந்தார். இதே மெய்நிகர் மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், கிருமி முறியடிப்புக்கு பிரிட்டனின் ஆதரவு குறித்து உறுதியளித்திருந்தார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, இத்தாலிய பிரதமர் கியுசெப் கொண்ட், பிரான்ஸ் அதிபர் இமேனுவல் மெக்ரோன் போன்ற தலைவர்களும் அதேபோல் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.

கிருமி முறியடிப்பு தொடர்பில் ஸ்பெயின், பெல்ஜியம், சுவீடன், டென்மார்க், அமெரிக்கா போன்ற நாடுகள் நிதி ஆதரவு அளிப்பதாகவும் உறுதியளித்திருந்தன. சிங்கப்பூரில் இதுவரை 43,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கொவிட்-19 கிருமி பாதிப்பால் இங்கு 26 பேர் உயிரிழந்து விட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!