'கொவிட்-19, பொருளியல் முக்கிய சவால்கள்'

'கொவிட்-19, பொருளியல் முக்கிய சவால்கள்'

2 mins read
49d29ff3-4706-4760-ba99-079559021e5c
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் (வலமிருந்து இரண்டாவது) பங்கேற்ற நேற்றைய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் (இடமிருந்து) குமாரி உதயசௌந்தரி, திரு கார்த்திகேயன் சோமசுந்தரம், திரு அருள் ஓஸ்வின். படம்: மக்கள் செயல் கட்சி -

சமயம், இனம் தொடர்பான வி‌‌ஷயங்கள் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியவை என்றும் சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்க ஒருவர் மற்றவரின் இனத்தைப் பற்றி குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் வலியுறுத்தி இருக்கிறார்.

தேர்தல் பிரசார இறுதி நாளான நேற்று இந்திய இளையர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் சண்முகம் பங்கேற்றார். அப்போது, தேர்தல், வேலைவாய்ப்புகள், சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்கள் போன்ற பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்த இளையர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இக்கால இளையர்களின் அணுகுமுறை வித்தியாசமானது என்று குறிப்பிட்ட அமைச்சர், அவர்கள் சமயம், இனம் சார்ந்த வி‌‌ஷயங்களைப் பற்றி இன்னும் வெளிப்படையாகப் பேசுகின்றனர் என்றார்.

"அந்த அணுகுமுறை தவறு என்று சொல்லமுடியாது. ஆனால், அந்த விவகாரங்கள் தொடர்பில் இளையர்களுடன் இன்னும் ஆழமாகக் கலந்து பேசி புரிய வைக்க முனைய வேண்டும்," என்று திரு சண்முகம் சொன்னார்.

பொதுத் தேர்தலை இப்போதே நடத்துவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் அதற்கு மூலகாரணம் என்றார்.

கிருமித்தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கும் பொருளியல் நிலவரம் மேம்பட்டு, முக்கிய திட்டங்களை வகுக்க முன்கூட்டியே திட்டமிடுவதற்கு காலஅவகாசம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசாரத்தின்போது வேலைவாய்ப்பு, சுகாதாரம், கிருமித் தொற்றுப் பிரச்சினை எப்போது ஓயும் ஆகியவையே வாக்காளர்களின் முக்கிய அக்கறையாக இருந்தன என்றார் அமைச்சர்.

மக்கள் செயல் கட்சியில் இந்த முறை புதிய இந்திய வேட்பாளர் எவரும் இல்லாதது குறித்தும் அமைச்சரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, தகுதியும் முக்கியம், அதே நேரத்தில் இனப் பிரதிநிதித்துவமும் முக்கியம் என்ற திரு சண்முகம், மக்கள்தொகையில் இந்தியர்களின் விகிதத்தைக் காட்டிலும் வேட்பாளர்களில் இந்தியர் பிரதிநிதித்துவம் சற்று கூடுதலாக இருப்பதை மீண்டும் சுட்டினார்.

கொரோனா நோய்ப் பரவலைச் சமாளித்து, அதிலிருந்து மீண்டு வருவதும் நாட்டின் பொருளியல் நிலையை மேம்படுத்துவதும் சிங்கப்பூர் எதிர்நோக்கும் இரு முக்கிய சவால்கள் என்றார் அமைச்சர்.

தேர்தலில் மசெகவுக்கு வலுவான ஆதரவு கிடைத்தால் தங்களது பங்கினைச் செவ்வனே ஆற்ற முடியும் என்றும் அவர் சொன்னார்.

கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற செயல்களை எந்தக் கட்சியால் செயல்படுத்த முடியும் என்பதை வாக்காளர்கள் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறினார். இந்த இக்கட்டான காலகட்டத்தில் சிங்கப்பூரர்களைப் பாதுகாத்து, எதிர்வரும் சவால்களைக் கடக்க உதவும் கட்சியை அவர்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.