இந்தத் தேர்தலில் தனித் தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சியின் பெண் வேட்பாளர்கள் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட மேரிமவுண்ட் தனித் தொகுதி அணுக்கமாகக் கவனிக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று. அதில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் ராணுவப் பின்னணியைக் கொண்டவர்கள்.
முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட சிங்கப்பூரின் முதல் பெண் ஜெனரலான மசெக வேட்பாளர் கான் சியோ ஹுவாங், 55.04 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர் முன்னேற்ற கட்சியைச் சேர்ந்த முன்னாள் கர்னலான ஆங் யோங் குவான் 44.96 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். அவருக்கு இது மூன்றாவது தேர்தல் முறையாகும்.
மூன்று பிள்ளைகளுக்குத் தாயான திருமதி கான், சிங்கப்பூர் ஆகாயப்படைத் தளபதியாக இருந்தார் .அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு ஏப்ரல் மாதம் தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் வேலை நியமன, வேலைத்தகுதி கழகத்தில் துணை தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு உயர் பதவி அளிக்கப்படும் என்று பேசப்பட்டது.
குழுத் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்ட 1988ஆம் ஆண்டிலிருந்து மசெக தனித்தொகுதியில் களமிறங்கிய இரண்டாவது புதுமுக வேட்பாளர் இவர். குமாரி ஷெரில் சான் 2015இல் ஃபெங்ஷானில் களமிறக்கப்பட்டார்.
மேரிமவுண்ட் தனித் தொகுதி பிஷான்- தோ பாயோ குழுத் தொகுதியிலிருந்து இந்த ஆண்டு தனியாகப் பிரிக்கப்பட்டது. இத்தொகுதியில் 23,444 வாக்காளர்கள் உள்ளனர்.
திருமதி கான், முதியவர்கள், அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்க விரும்புகிறேன் என்று தேர்தல் பிரசாரத்தில் தொகுதிவாசிகளுக்குக் கூறியிருந்தார். 70 வயதுகளில் இருக்கும் அவரது மாமனார், மாமியார் இருவரும் புற்றுநோய் ஏற்பட்டு குணமடைந்தவர்கள்.
அவர் குறிப்பிட்ட மற்றொரு பிரச்சினை வேலைகள். கொவிட்-19 தொற்றுநோய் போன்ற நெருக்கடி நிலையில், சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்.
டின் பெய் லிங்தனித் தொகுதிகளில் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்று பெண்கள் வேட்பாளர்களில் முதலிடம் பிடித்தவர், மசெகவின் செல்வி டின் பெய் லிங், 36. மெக்பெர்சனில் 71.74% வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து நின்ற மக்கள் சக்தி கட்சியின் 50 வயது திரு கோ மெங் செங் பெற்ற வாக்குகள் 28.26%
இத்தொகுதிக்கு 2011இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2015ல் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கினார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் திரு ராபின் லோ, 44, 29.46% பெற்றார்.
கிரேஸ் ஃபூயுஹுவா தனித் தொகுதியில் 70.54% வாக்குகளுடன் வெற்றி பெற்றிருக்கிறார் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சரான 56 வயது கிரேஸ் ஃபூ.
இந்த பொதுத் தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிட்ட ஒரே முழு அமைச்சர் இவர், கடந்த 14 ஆண்டுகளாக இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இத்தொகுதியின் கால்வாசி பேரான சுமார் 8,000 குடியிருப்பாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதாக அவர் உறுதியளித்தார்.
சுன் சூலிங்புதிதாக உருவாக்கப்பட்ட பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியில் 60.97% வாக்குகளுடன் வெற்றி பெற்றார் உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்ற செயலாளர் மசெகவின் செல்வி சுன் சூலிங். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சி வேட்பாளர் டான் சென் சென் 39.03% வாக்குகளைப் பெற்றார்.
ஏமி கோர்ஹாங் கா நார்த் நகரில், 62 வயதான சுகாதாரம், சுற்றுப்புற நீர்வளத்துறைகளுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் 60.98% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவர் எதிர்த்துப் போட்டியிட்ட பிஎஸ்பியின் திருமதி ஜிகீன் வோங், 39.02% வாக்குகளைப் பெற்றார்.
2015 தேர்தலில் சிறந்த வெற்றியைப் பெற்றவர்களில் ஒருவர் டாக்டர் ஏமி கோர். அந்த ஆண்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிங்கப்பூர் மக்கள் கட்சியின் திரு ரவி பிலேமோன் எதிராக 74.76% வாக்குகளைப் பெற்றார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு பலதுறை மருந்தகம், ஓர் உணவங்காடி, ஞாபக மறதி நோயாளிகளுக்கான ஒரு பூங்கா உள்ளிட்ட திட்டங்களை ஹாங் கா நார்த் தொகுதிக்கு அவர் அறிவித்துள்ளார்.
இயோ சூ காங்கில், தனது முதல் தேர்தலில் போட்டியிட்ட கணக்காளரும் முன்னாள் சிறைச்சாலை அதிகாரியுமான சிங்கப்பூர் முன்னேறக் கட்சி வேட்பாளர் 43 வயது கெய்லா லோ, 61 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற மசெகவின் 43 வயது திரு யிப் ஹொன் வெங்கிற்கு எதிராக 39% வாக்குகளைப் பெற்றார்.