மசெகவுக்கு மக்கள் தெளிவான ஆதரவு

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்குத் தெள்ளத் தெளிவாக ஆதரவு வழங்கியிருக்கிறார்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரி வித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பல மாறுபட்ட குரல்கள் ஒலிக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தையும் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தலில் தாம் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்றாலும் தேசிய அளவில் மசெக பெற்றிருக்கும் 61.24% வாக்குகள் கட்சிக்கு பரந்த அளவில் ஆதரவு இருப்பதை புலப்படுத்துவதாக அவர் கூறினார்.

எது முக்கியம் என்பதை சிங்கப்பூரர்கள் புரிந்துகொண்டுள்ளனர். தேசிய நலன்களைப் பாதுகாத்து, பலப்படுத்த அனைவரும் ஒன்றுதிரள வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என்றார் அவர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் கருவூலக் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடந்த மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதமர், மக்கள் செயல் கட்சி மீது சிங்கப்பூரர்கள் வைத்துள்ள நம்பிக்கை குறித்து தாம் பெருமைப்படுவதாக கூறினார்.

கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு லீ, மக்கள் இப்போது கொடுத்துள்ள ஆதரவைப் பயன்படுத்தி கொவிட்-19 சூழ்நிலையை சமாளித்து நாட்டை நெருக்கடிநிலையில் இருந்து மீட்டு, முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து நடத்திச் செல்லப் போவதாக உறுதியளித்தார்.

நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்த திரு லீ, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தேர்தல் முடிவு தமக்கு மனநிறைவு அளிப்பதாகக் கூறினார்.

மசெக அரசாங்கமே அமைய வேண்டும் என்று சிங்கப்பூரர்கள் விரும்புகிறார்கள். அதேவேளையில் வாக்காளர்கள், குறிப்பாக இளையவர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பு இப்போது இருப்பதைவிட, இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள் என்பதை தாம் ஒப்புக்கொள்ளவதாகக் குறிப்பிட்டார்.

செங்காங்கில் மசெக தோற்றது தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறிய பிரதமர், அந்தத் தொகுதியில் தொழிற்சங்க தலைவர் இங் சீ மெங் தலைமையில் போட்டியிட்ட மசெக அணி அங்கு கடுமையான போட்டி இருக்கும் என்று எப்போதுமே எதிர்பார்த்து இருந்தது என்றார். செங்காங் வாக்காளர்கள் முடிவை தாம் மதிப்பதாகவும் அவர் கூறினார். திரு இங் சீ மெங்கின் தோல்வி நான்காம் தலைமுறை தலைவர்கள் அணிக்கு ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க இழப்பு என்றும் திரு லீ சொன்னார். எனினும், தொடர்ந்து செங்காங் குடியிருப்பாளர்களின் நம்பிக்கையைப் பெற மசெக பாடுபடும் என்றும் அடுத்த முறை செங்காங், அல்ஜுனிட் குழுத்தொகுதிகளைக் கைப்பற்ற ஆவன செய்யும் என்றும் அவர் கூறினார்.

இந்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை வென்ற மசெக 31 தொகுதிகளில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும் கடந்த 2015ல் பெற்ற 69.9% வாக்குகளைவிட இத்தேர்தலில் 8.62% குறைவாக 61.24% வாக்குகளைப் பெற்றது. ஆனால், 2011ல் பெற்ற 60.1% வாக்குகளைவிட அதிகம்.

தேர்தலுக்குப் பிறகு அடுத்த தலைமுறைத் தலைவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க காத்துக்கொண்டிருந்த வேளையில் கொவிட்-19 தொற்றால் எதிர்பாராத பெரும் நெருக்கடி ஏற்படும் என்று தாம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்ற பிரதமர், தாமும் மூத்த அமைச்சர்கள் திரு தர்மன் சண்முகரத்னம், திரு டியோ சீ ஹியன், திரு கா. சண்முகம் போன்றோர் தொடர்ந்து சிங்கப்பூரை இந்த நெருக்கடியிலிருந்து மீட்க செயல்படப்போவதாக உறுதி அளித்தார்.

கொவிட்-19 நெருக்கடி காலத்தில் மக்கள் உணர்ந்த வலியையும் நிச்சயமற்ற நிலையையும் தேர்தல் முடிவு காட்டுகிறது. பல பிரச்சினைகளைச் சந்திக்கும் மக்கள், மேலும் கடினமான சூழலை எதிர்நோக்கும் ஒரு சூழலில் நடந்த தேர்தல் இது. தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் முன்வைத்த கவலைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

முதலாவதாக, பொருளியலை மறுசீரமைப்பதும் தொழில்துறையை மாற்றியமைக்கும் பணியும் தொடர வேண்டும். வேலைகளைப் பாதுகாத்தல், புதிய வேலைகளை உருவாக்குதல் போன்ற பணிகள் தொடர வேண்டும்.

சிங்கப்பூரின் அடிப்படைகளை தொடர்ந்து வலியுறுத்துவதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதும் முக்கியம் என்று அவர் கூறினார்.

தேர்தல் முடிவுகள் சிங்கப்பூரை வலுப்படுத்துகிறதா என்ற கேள்விக்குப் பதில் மசெகவை மட்டுமல்ல, எதிர்க்கட்சியையும் சார்ந்தது என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரை நான்காவது தலைமுறைக் குழுவிடம் “சிறப்பான நிலையில்” ஒப்படைப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்கா பிரதமர் லீக்கு நேற்று வாழ்த்துச் செய்தி அனுப்பியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!