இன்றைய பிற்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் புதிதாக 178 பேரை கொரோனா கிருமி தொற்றி உள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கொவிட்-19 கிருமித் தொற்றுகளின் எண்ணிக்கை 45, 961க்கு உயர்ந்தது.
இவர்களில் ஒருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இன்னொருவருக்கு இந்நோய் வெளிநாட்டில் தொற்றியதாகவும் சிங்கப்பூருக்கு வந்த பிறகு அவருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.
பாதிக்கப்பட்ட மற்றவர்கள் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள். மேல் விவரங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று அறிவிக்கப்படும்.
சுகாதார அமைச்சு அறிவித்த சமூக அளவில் பாதிக்கப்பட்டோரில் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 13 வயது மாணவியும் ஒருவர் என்று கல்வியமைச்சு கடந்த சனிக்கிழமை தெரிவித்தது. அதே பள்ளியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுவனுடன் அந்தச் சிறுமிக்குத் தொடர்பு இருந்ததாக கல்வியமைச்சு கூறியது. இம்மாணவர்கள் இருவருமே சிங்கப்பூரர்கள். அந்த மாணவி கடைசியாக ஜூலை 3ஆம் தேதியன்று பள்ளிக்குச் சென்றதாக கல்வியமைச்சு கூறியது.
பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனுடன் சுமார் 70 மாணவர்களும் பணியாளர்களும் அணுக்கமான தொடர்பில் இருந்ததாக கல்வியமைச்சு தெரிவித்தது. கடந்த வாரயிறுதியின்போது இந்தப் பள்ளி நன்றாக சுத்தம் செய்யப்பட்டு பலமுறை கிருமிநாசி தெளிக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
இந்தப் புதிய சம்பவத்தால் மேலும் ஆறு மாணவர்களுக்கும் நான்கு ஊழியர்களுக்கும் தனிமைப்படுத்தும் உத்தரவை சுகாதார அமைச்சு பிறப்பித்தது. கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பள்ளி, உயர்நிலை 1 மாணவர்கள் அனைவரையும் இந்த வாரம் வரை இல்லம் சார்ந்த கற்றலை நீட்டித்துள்ளது.

