செல்ல ‘புமா’வை விட்டுக்கொடுக்க மனமின்றித் தப்பியோடிய ஆடவர்

 

போலந்தில் ‘புமா’ விலங்கு ஒன்றைத் தன் செல்லப்பிராணியாக வளர்க்க முடிவு செய்த ஓர் ஆடவரை அந்நாட்டு போலிசார் தேடி வருகின்றனர்.

கமில் எஸ். என்ற அந்த ஆடவர், அந்த விலங்கைத் தன்னுடன்  கூட்டிக்கொண்டு மரங்கள் நிறைந்த காடுகளுக்குள் மறைந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

“இந்த விலங்கு விளையாட்டுப் பொருள் அல்ல. உலகிலேயே ஆக ஆபத்தான விலங்குகளில் அதுவும் ஒன்று,” என்று மேற்குப் போலந்திலுள்ள ‘ போஸ்னான்’ விலங்கியத் தோட்டத்தின் தலைவர் ஏவா ஸ்கிராப்ஸிங்ஸ்கா தெரிவித்தார்.

இந்த விலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வெள்ளிக்கிழமையன்று விலங்கியல் தோட்ட அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றபோது கமில், கத்தியால் மிரட்டி அவர் அந்த  விலங்குடன் ஓட்டம் பிடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்தை மனிதாபிமானத்துடன் அணுகும்படி இந்த ஆடவர் வசிக்கும் நகரத்தின் மேயர் டாரியஸ் வோஜ்டோவிச்ஸ் தெரிவித்தார்.