தென் சீனாவை மோசமாக பாதித்துவரும் பெருவெள்ளம்

தென் சீனாவின் பல்வேறு பகுதியில் ஏற்பட்டுள்ள அளவுகடந்த வெள்ளத்தால் கிட்டத்தட்ட 34 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளம் அடுத்த சில நாட்களில் மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சீன அரசு ஊடகங்கள் முன்னுரைத்துள்ளன.

சீனாவின் தென்மேற்கு மாநிலமான குவாங்சீயிலுள்ள ரோங் ஆற்றின் நீர்மட்டம் கடந்த சனிக்கிழமை காலை பலத்த மழைக்குப் பிறகு 5.04 மீட்டருக்கு உயர்ந்தது. வெள்ளம்  தொடர்பான எச்சரிக்கையை அதிகாரிகள் முன்னதாகவே விடுத்திருந்ததால் எந்த உயிரிழப்பும் நேரவில்லை. 

ஜியாங்ஸி மாநிலத்திலுள்ள சீனாவின் ஆகப் பெரிய நன்னீர் தடாகமான போயாங்கின் நீர்மட்டம் 22. 65 மீட்டர் உயர்ந்தது. அந்த மாநிலத்திலிருந்து சுமார் 432,000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த மற்றொரு இடமான  ஹுபே மாநிலத்திலுள்ள மக்களை  வெள்ளப் பிரச்சினை  மேலும் துயரில் ஆழ்த்தியுள்ளது.