வாக்களிப்பு வேகம் மந்தமானது ஏன்: தேர்தல் துறை மறுஆய்வு

தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு வேகம் மந்தமாக இருந்ததற்கான காரணத்தைத் கண்டறியும் பொருட்டு முழுமையான மறுஆய்வு நடத்த இருப்பதாகத் தேர்தல் துறை தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு நாளன்று ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக, குறிப்பிட்ட மூத்த குடிமக்களிடம் தேர்தல் துறை மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. முந்தைய தேர்தல்களைப் போல அல்லாமல், வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்பை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள், துரிதமாக வாக்களிக்கும் முறைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. 

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளி–யான ஒரு வாசகர் கடிதத்திற்குத் தேர்தல் துறையின் தலைமை அதிகாரி கோ சியோங் லிங் இன்று பதில் அளித்தார். வாக்களிப்பதற்காகத் தேர்தல் நாளன்று தாமும் தம்முடைய 85 வயது தாயாரும் காலை 9.30 மணியளவில் ஜிங் ஷான் தொடக்கப் பள்ளிக்குச் சென்றதாகவும் வாக்கு அளிக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனதாகவும் திரு டெனிஸ் டான் சியாவ் கூன் என்பவர் கூறி இருந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பத்து நிமிடங்களில் வாக்களித்துவிட்டதாகவும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், “என்ன தவறு நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முழுமையான மறுஆய்வு மேற்கொள்வோம்,” என்றார் திரு கோ.