சமூகத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா

சமூகத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா

2 mins read
ce411eef-14de-438b-b6cd-1e8f0e60013d
-

சிங்கப்பூரில் மேலும் 202 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து, கிருமித்தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47,655ஆக அதிகரித்து இருக்கிறது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் எழுவருக்கு சமூக அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஐவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும் இருவர் வேலை அனுமதி அட்டைதாரர்கள் என்றும் சுகாதார அமைச்சு நேற்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. அத்துடன், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த எட்டுப் பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிங்கப்பூருக்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

இதற்கிடையே, வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த மூவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் பிற்பகல் அறிவித்திருந்தது. அவர்களில் இருவர் இந்தியாவிலிருந்து வந்த பெண் குழந்தைகள் என அமைச்சு அன்றிரவு வெளியிட்ட வேறொரு அறிக்கையில் தெரிவித்தது. அவ்விரு குழந்தைகளுக்கும் ஒரு வயது.

ஒரு குழந்தை சார்ந்திருப்போர் அட்டையை வைத்துள்ளது. மற்றொரு குழந்தை நீண்டகால வருகை அனுமதி அட்டையை வைத்திருக்கிறது. வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்து தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்றாமவர், இம்மாதம் 6ஆம் தேதி பிலிப்பீன்சிலிருந்து இங்கு வந்தார். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் அனைவருக்கும் 14 நாட்கள் வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவு நடப்பிலிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கிருமித்தொற்று அல்லாது மற்ற உடல்நலப் பிரச்சினைகளால் 72 வயது சிங்கப்பூர் மாது கடந்த புதன்கிழமை உயிர் இழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்தது. கிருமித்தொற்று அல்லாது மற்ற உடல்நலப் பிரச்சினைகளால் மரணமடைந்த 15வது நபர் அவர். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அந்த மாது உயிரிழந்ததாக அமைச்சு தெரிவித்தது. அவர் இறந்த மறுநாள் அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.