தீமிதியில் பங்கெடுப்பு: இந்து அறக்கட்டளை வாரியம் விளக்கம்

தீமிதியில் பங்கெடுப்பு: இந்து அறக்கட்டளை வாரியம் விளக்கம்

2 mins read
a5c08556-8ccb-4e4c-94b1-3c2b2daac669
-

சிங்கப்பூரில் இந்த ஆண்டு தீமிதித் திருவிழா சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வரும் நவம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா, கொவிட்-19 தொடர்பிலான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் நடக்கும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் அனைத்து திருவிழா நடவடிக்கைகளும் இந்த ஆண்டு ஒரு மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படுகின்றன. கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக இவ்வாண்டு தீமிதி விழா பொது பக்தர்கள் பங்கேற்பின்றி நடக்கும் என்றும் வாரியம் குறிப்பிட்டு இருக்கிறது.

இந்நிலையில் இன்று இந்த வாரியம், தீமிதிப்பவர்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றில் விளக்கமளித்தது.

பொதுமக்கள் பங்கெடுப்பு இல்லாமல் தீமிதி நடக்கும்போது குறிப்பிட்ட தொண்டூழியர்கள், அதிகாரிகள், குழு உறுப்பினர்கள் ஆகியோர் தீமிதிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று யாராவது கருதினால் அது தவறானது என்று வாரியம் தெரிவித்தது.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் இருந்தாலும் தீமிதிப்பு தொடர்பான எல்லா சமயச் சடங்குகளும் நடைபெறுவதற்குத் தோதாக அதிகாரிகளுடன் இந்தக் கோயில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தீமிதி தொடர்பான சமய நிகழ்ச்சிகள் இடம்பெறும் நோக்கில் அர்ச்சகர்கள், பண்டாரங்களுடன் கரகம் அணியைச் சேர்ந்த தொண்டூழியர்கள், மகாபாரத காட்சிகளை அரங்கேற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டு உள்ளவர்கள், தீமிதி சம்பிரதாயங்களில் நேரடியாகத் தொடர்புள்ளவர்கள் மட்டுமே தீக்குழியில் இறங்க அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்கள் தீமிதி சமய சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதற்காக தீ மிதிப்பர் என்றும் தனிப்பட்ட முறையில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக அல்ல என்றும் வாரியம் விளக்கியது.

கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்பான நடப்பு வழிகாட்டி நெறிமுறைகள், பாதுகாப்பு இடைவெளி நிபந்தனைகள் காரணமாக கோயிலுக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொதுமக்களை அனுமதிக்க முடியாது என்று வாரியம் தெரிவித்தது.

எந்த ஒருவரும் தன்னுடைய சொந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக இந்த ஆண்டு தீ மிதிக்க முடியாது என்பதை வாரியம் அறிக்கையில் சுட்டிக்காட்டியது.