தேசிய நாள் இஸ்தானா பொது வரவேற்பு நேரலையில்

தேசிய நாளன்று இடம்பெறும் இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்வு இவ்வாண்டு  இணையத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அரிதாக அனுமதிக்கப்படும் அதிபர் மாளிகையின் பகுதிகள் சிலவற்றை வருகையாளர்கள் இந்த இணையச் சுற்றுலா வழியாகக் கண்டு களிக்கலாம்.

அதிபர் மாளிகையின் சுரங்கப் பகுதியில் உள்ள 'பங்கர்' எனும் பதுங்கு குழி, இரண்டாம் உலகப் போரின்போது அதிபர் மாளிகைய ஊழியர்கள் ஆகாயத் தாக்குதல்களிலிருந்து பதுங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அப்போது இஸ்தானா  'கவர்மண்ட் ஹவுஸ்' என அழைக்கப்பட்டது.

பொதுமக்கள் நேரில் காணமுடியாத மற்றோர் அம்சம், அங்குள்ள 14.5 மீட்டர் ஆழமான கிணறு. இஸ்தானாவின் பிரதானக் கட்டடத்தின் பக்கவாட்டில் அது உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்ட இந்திய கைதிகளால் இந்தக் கிணறு வெட்டப்பட்டிருக்கலாம்.  'கவர்மண்ட் ஹவுஸ்' கட்டடத்தின் கட்டுமான ஊழியர்களாக இவர்கள் பணியாற்றினர்.

ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்நிகழ்ச்சி அதிபர் ஹலிமா யாக்கோப்பின் ஃபேஸ்புக்,  இன்ஸ்டகிராம் பக்கங்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 10 மணி முதல் ஒளியேறும்.