ஊழியர் தங்கும் விடுதியில் இந்திய ஊழியர் மரணம், மொட்டைமாடி விளிம்பில் மற்றொரு ஊழியர்...

சுங்கை தெங்கா லாட்ஜ் தங்கும் விடுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் இருவர் தொடர்பான சம்பவங்கள் குறித்து நேற்று (ஜூலை 24) போலிசாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

37 வயது இந்திய ஊழியர் எண் 512 பழைய சுவா சூ காங் ரோடு முகவரியில் இயற்கைக்கு மாறான விதத்தில் இறந்துகிடந்தார்.

19 வயதான மற்றொரு ஊழியர் அந்த விடுதியின் கட்டடங்கள் ஒன்றின் மொட்டை மாடி விளிம்பில் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தார், விடுதிவாசிகள் இருவர் அவரை பாதுகாப்பான இடத்துக்கு  இழுத்துச் சென்றனர்.

விடுதியில் இந்திய ஊழியர் மரணம்:

இந்திய ஊழியர் இறந்துகிடந்தது பற்றி நேற்று காலை 7.17 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.

அசைவின்றிக் கிடந்த அவர் உயிரிழந்துவிட்டதாக சம்பவ இடத்துக்கு விரைந்த துணை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இதில் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்ட போலிசார் விசாரணையைத் தொடர்ந்துள்ளனர்.

ஊழியரின் மரணம் குறித்து அவரது குடும்பம், முதலாளி, தூதரகம் ஆகியவற்றுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியரின் முதலாளியும் வெளிநாட்டு ஊழியர் நிலையமும் அவரது குடும்பத்தாருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அந்தச் சம்பவம் நடந்து சுமார் 3 மணி நேரத்தில், அதே விடுதியில் மற்றொரு சம்பவமும் நிகழ்ந்தது.

இளையர் மொட்டைமாடி விளிம்பில்...

13 மாடி கட்டடத்தின் மொட்டைமாடியின் விளிம்பில் ஊழியர் ஒருவர் பதற்றத்துடன் நின்றிருந்தார்.

எண் 506 பழைய சுவா சூ காங் ரோடு முகவரியில் இருக்கும் கட்டடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றி போலிசாருக்கு காலை 10.27 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளி ஒன்றில், இளையர் ஒருவர் மொட்டை மாடி விளிம்பில் இருப்பதையும் இருவர் ஓடி வந்து அவரை பாதுகாப்பான இடத்துக்கு இழுத்துச் செல்வதையும் காண முடிந்தது.

மன நலன் (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) சட்டத்தின் 7வது பிரிவின் கீழ், 19 வயதான அந்த இளையர் கைது செய்யப்பட்டார்.

இவ்விரு சம்பவங்கள் குறித்து தெரியும் என மனிதவள அமைச்சு  குறிப்பிட்டதாக மதர்ஷிப் செய்தி இணையப்பக்கம் குறிப்பிட்டது.

சுங்கை தெங்கா லாட்ஜில் 13 மாடிகளைக் கொண்ட 10 கட்டடங்களில் சுமார் 25,000 ஊழியர்கள் வசிக்க இயலும்.