மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு 12 ஆண்டு சிறை, 210 மி. ரிங்கிட் அபராதம்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு 12 ஆண்டு சிறை, 210 மி. ரிங்கிட் அபராதம்

2 mins read
2c89583d-9f76-49eb-89d8-47a4ab2858f2
ஆதரவாளர்கள் புடைசூழ நஜிப் ரசாக் (இடமிருந்து இரண்டாவது) நீதிமன்றத்துக்குள் நுழைந்தார். படம்: தி ஸ்டார் -

'1எம்டிபி' ஊழல் வழக்கு தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான 7 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியதில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 210 மில்லியன் ரிங்கிட் (S$68.1 மி.)அபராதமும் விதித்து இன்று (ஜூலை 28) தீர்ப்பளிக்கப்பட்டது.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது '1எம்டிபி' ஊழல் தொடர்பில் தொடுக்கப்பட்ட 5 வழக்குகளின், முதல் வழக்கில் அவர் மீதான 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதன் தொடர்பிலான ஒரு குற்றச்சாட்டு, நம்பிக்கை மோசடி தொடர்பிலான மூன்று குற்றச்சாட்டுகள், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 42 மில்லியன் ரிங்கிட் (S$13.6 மில்லியன்) கள்ள பணத்தை நல்ல பணமாக்கியது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் தொடர்பில் நஜிப், 67, குற்றமிழைத்துள்ளார் என்று உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான் முகமது கஸாலி தெரிவித்தார்.

3 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள், மூன்று பண மோசடி குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிப்பதால் அவர் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று நஜிப் குறிப்பிட்டிருந்தார்.

தாம் குற்றமற்றவர் என்று குற்றச்சாட்டுகளை மறுத்து நீதிமன்றத்தில் நேற்று பேசிய நஜிப், "நான் 42 மில்லியன் ரிங்கட் வேண்டும் என்று கேட்கவில்லை. அது எனக்குத் தரப்படவும் இல்லை. இதற்கான ஆதாரமும் இல்லை," என்றார்.

குறிப்புச் சொற்கள்