அப்பர் பாய லேபார்: தனியார் குடியிருப்புப் பகுதி குப்பைத் தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் கண்டெடுப்பு

அப்பர் பாய லேபார் ரோட்டுக்கு அருகில் உள்ள தனியார் குடியிருப்புப் பகுதியில், குப்பைத்தொட்டி ஒன்றில், பச்சிளம் ஆண் சிசு கண்டெடுக்கப்பட்டதன் தொடர்பில் போலிசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இந்தச் சம்பவத்தின் தொடர்பில், தாய் கெங்  கார்டன்சில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் இருந்து, நேற்று முன்தினம் (ஜூலை 27) இரவு 7.45 மணியளவில் உதவி கோரப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.

புதிதாகப் பிறந்த ஆண் சிசு ஒன்றை அதிகாரிகள் அங்கு கண்டனர்.

“குழந்தையின் உடலில் காயம் எதுவும் தென்படவில்லை. உடல்நலம் சீராக உள்ளது,” என போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அந்தச் சிசு கேகே மகளிர் மற்றும் சிறுவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

குப்பைத்தொட்டிக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டதையடுத்து, அக்கம்பக்கவாசிகள் குழந்தையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டது.

திரு லியூ என அறியப்படும் 65 வயது ஆடவர், அந்தக் குழந்தையை தமது மருமகன் கண்டுபிடித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

“குப்பைத்தொட்டியிலிருந்து வித்தியாசமான சத்தம் கேட்டதால், மருமகன் எங்களைப் பார்க்கச் சொன்னார்,” என்றார் திரு லியூ.

“அது பூனையாகவோ, நாயாகவோ இருக்கலாம் என அஞ்சி யாரும் குப்பைத்தொட்டியைத் திறக்கவில்லை. என்னை உதவிக்கு அழைத்தனர்,” என்று திரு லியூ குறிப்பிட்டார்.

குப்பைத் தொட்டியைத் திறந்த அவர் அதிர்ந்துபோனார். துண்டால் சுற்றப்பட்டு, காகிதப் பைகளுக்குள் பச்சிளம் குழந்தை இருப்பதைக் கண்டார். அவரது குடும்பம் போலிசுக்குத் தகவல் அளித்தது.

“பையின் கைப்பிடியைப் பிடித்து தூக்க முற்பட்டபோது, பை கிழியத் தொடங்கியது. எனவே, குப்பைத் தொட்டியைச் சாய்த்து குழந்தையைத் தூக்கினோம்,” என்றார் திரு லியூ. 

குழந்தை மூச்சுவிடுவதற்கு ஏதுவாக முகத்தின் மீதிருந்த துண்டை விலக்கியதும் குழந்தையின் அழுகுரல் சத்தமாகக் கேட்கத் தொடங்கியது என்ற திரு லியூ, தம் மனைவி குழந்தையைச் சமாதானப்படுத்த முயன்றதாகக் கூறினார்.

சில நிமிடங்களுக்குள் அவசர சிகிச்சை வாகனம் சம்பவ இடத்துக்கு வந்தது.

குழந்தை உயிருடன், நலமுடன் இருப்பது நிம்மதி அளிப்பதாகக் கூறினார் திரு லியூ.