சிங்கப்பூரில் 400 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது பிராட் & விட்னி

ஆகாய விமான இயந்திரங்களைத் தயாரிக்கும் பிராட் & விட்னி நிறுவனம், சிங்கப்பூரில் இருக்கும் அதன் ஆறு வளாகங்களில் சுமார் 400 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. கொவிட்-19 நெருக்கடி காரணமாக விமானத் துறை பெரிதும் இழப்பைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த நிறுவனத்தில் இங்கு சுமார் 2,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஊழியர்கள் அங்கு பணிபுரியும் சராசரி காலம் 14 ஆண்டுகள்.

இருப்பினும், ஆட்குறைப்புக்குப் பிறகுள்ள ஊழியர்களில் உள்ளூர் ஊழியரணி சுமார் 77 விழுக்காடாக இருக்கும் என்று அது குறிப்பிட்டது.

இங்கு சுமார் 37 ஆண்டுகளாகச் செயல்படும் அந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் முதல், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளின் தொடர்பில் சிங்கப்பூர் தொழில்துறை மற்றும் சேவைகள் ஊழியர் சங்கம் (SISEU), தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வந்தது.

தற்காலிக ஊதியக் குறைப்பு, குறைந்த வேலை நாட்கள் உள்ளிட்ட பல செலவு குறைப்பு நடவடிக்கைகளை அது மேற்கொண்டது. கடைசி முயற்சியாக ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிராட் & விட்னி நிறுவனம், நிலைமை சீரடையும்போது, விருப்பமுள்ளவர்கள் பணிக்குத் திரும்பலாம் என்றது.

கொவிட்-19க்கு முன்பிருந்த சூழலை விமானப் போக்குவரத்து எட்ட, 2023ஆம் ஆண்டுவரை ஆகலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில், ஏர்பஸ், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற நிறுவனங்களும் சிங்கப்பூரில் ஆட்குறைப்பு செய்தன.

மலிவுக்கட்டண விமானச் சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார் ஏஷியா 167 பேரை ஆட்குறைப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon