வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோர் இம்மாத இறுதிக்குள் தங்களது வேலையிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர்.இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கட்டுமான நடவடிக்கைகளும் திட்டங்களும் கூடிய விரைவில் தொடர முடியும் என்று கல்வியமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று தெரிவித்தார்.
ஆயினும் ஊழியர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்ட வளாகங்களில் தற்போது தங்கியுள்ள நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் அவர்களுக்குச் சோதனை நடத்தப்படும்போது புதிய கிருமித்தொற்றுகளின் தினசரி எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களைக் கூடிய விரைவில் வேலைக்கு அனுப்புவதற்கான முறையை அதிகாரிகள் துரிதப்படுத்த முயல்வதாக கிருமிப்பரவல் முறியடிப்பதற்கான அமைச்சர்நிலை பணிக்குழுவின் இணைத்தலைவராக உள்ள திரு வோங் கூறினார். ஊழியர்கள் வேலைக்குத் திரும்பும் முன்னரே வேலையிடங்களில் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்படி திரு வோங் முதலாளிகளையும் குத்தகையாளர்களையும் ஊக்குவித்துள்ளார்.
வேறு பல நடவடிக்கைகளுடன் முதலாளிகள் தங்குமிடங்களுக்கும் வேலையிடங்களுக்கும் இடையே சிறப்பு போக்குரவத்துச் சேவைக்கு முதலாளிகள் ஏற்பாடு செய்யவேண்டும். அத்துடன் டிரேஸ்டுகெதர், சேஃப் என்ட்ரி ஆகியவற்றையும் வேலையிடங்களில் பயன்படுத்தப்படவேண்டும்.
மேலும், வெவ்வேறு திட்டங்களுக்கு ஊழியர்கள் அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் வெவ்வேறு வேலை வட்டாரங்களாகப் பிரிக்கப்படுவர். ஒரே கட்டுமானத் திட்டத்தில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் வெவ்வேறு விடுதிகளில் தங்குவதற்குப் பதிலாக ஒரே இடத்தில் தங்குவர்.
வேலை மீண்டும் தொடங்கினாலும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று திரு வோங் தெரிவித்தார். ஒவ்வொரு 14 நாள் காலகட்டத்திற்கும் விடுதிகளில் தங்கும் ஊழியர்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படுவர் என அவர் கூறினார்.

