புதிய மலாய் சார்ந்த கட்சி ஒன்றைத் தொடங்கியிருப்பதாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது அறிவித்து இருக்கிறார்.
தற்போது பெயர் சூட்டப்படாத அந்தக் கட்சி இன்னும் பதிவு செய்யப்படவில்லை. பக்கத்தான் ஹரப்பானிலோ தற்போதைய ஆளுங்கூட்டணி பெரிக்கத்தான் நேசனலிலோ இந்தப் புதிய கட்சி இடம்பெறாது என்று டாக்டர் மகாதீர், 95, தெரிவித்தார்.
டாக்டர் மகாதீர் உருவாக்கிய பிரிபூமி பெர்சாத்துக் கட்சியின் தற்போதைய தலைவரும் மலேசியாவின் தற்போதைய பிரதமருமான முகைதீன் யாசினால் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் புதிய கட்சியில் இணைவர்.
எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தமது கட்சி சுயேட்சையாகச் செயல்படும் என்றார் டாக்டர் மகாதீர்.
"இந்நாட்டில் மலாய் அரசியல் கட்சிகள் அளவுக்கு அதிகமாக உள்ளன என்பது எனக்கும் தெரியும். ஆனால் அந்தக் கட்சிகள், தங்களது ஆரம்பக் கொள்கைகளிலிருந்து விலகியுள்ளன," என்று அவர் கூறினார்.
மூன்று கட்சிகளை உள்ளடக்கும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் திரு அன்வார் இப்ராஹிம்- டாக்டர் மகாதீரின் உறவிலுள்ள நெருடலை அவர் புதிய கட்சியை ஆரம்பித்தது புலப்படுத்துவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
பெர்சாத்துக் கட்சிக்கான டாக்டர் மாகதீர் மற்றும் நான்கு உறுப்பினர்களின் கட்சி உறுப்பியத்தை திரு முகைதீன் ரத்து செய்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை மலேசிய நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து புதிய கட்சி தொடர்பிலான அறிவிப்பு வெளிவந்தது.

