வேறு வழியின்றி ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களில் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது. நியாயமான, வெளிப்படைத்தன்மையுடைய முறையில் இது நடக்க வேண்டும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் சம்மேளனம் குறிப்பிட்டது.
"வயது, இனம், பாலினம், சமயம், உடற்குறை போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஒரு குறிப்பிட்ட சாராருக்கும் எதிராக நிறுவனங்கள் பாரபட்சம் காட்டக்கூடாது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை அவர்களது திறன்கள், அனுபவங்கள் அடிப்படையில் நிறு வனங்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நிறுவனம் மேலும் வலுப் பெற்றதாக மீண்டு வந்து எதிர்காலத்தில் சிங்கப்பூரர் களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்," என்று அறிவுறுத்தல் குறிப்பில் குறிப்பிடப்பட்டது. இருப்பினும் ஆட்குறைப்பு இறுதிக்கட்ட முடிவாகவே இருக்க வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக செலவுகளைக் குறைக்கும்
நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. பாகுபாடு காட்டும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை
வேலைக்கு ஆள் எடுப்பதில் பாகுபாடு காட்டிய மேலும் 47 நிறு வனங்களின் பெயர்கள், நியாயப் பரிசீலனைக் கட்டமைப்பின் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, நிறு வனங்களின் பெயர்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் உதவித் தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே.
இதனால் வெளிப்படைத்தன்மை இருப்பதுடன் இத்தகைய போக்கு உடனே களையப்பட வேண்டும் என்ற செய்தியை நிறுவனங்களிடத்தில் வலுவாகக் கொண்டுபோய் சேர்க்கும் என்று அவர் கூறினார்.
தற்போதுள்ள வேலைவாய்ப்புச் சூழலில் சிங்கப்பூரர்கள் நியாயமாக நடத்தப்படுவதை உறுதிசெய்வது மிக முக்கியமானதாகி உள்ளது என்று திரு டே சொன்னார். ஏற்கெனவே இதன் தொடர்பான கண்காணிப்பு வளையத்தில் 1,200 நிறுவனங்களின் பெயர்கள் உள்ளன. பட்டியலில் இடம்பெறும் நிறு வனங்கள், தங்களின் வேலை நியமன முறையைச் சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, நிறுவனங்களின் வேலை நியமன முறை மதிப்பீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

