சுடச் சுடச் செய்திகள்

'நெருக்கடியில் இருந்து சிங்கப்பூர் மீண்டு எழும்'

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தது முதலே சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இருந்து பல சவால்களைச் சமாளித்து வந்துள்ளனர். அதைப்போலவே இப்போதும் கொவிட்-19 நெருக்கடியைச் சமாளித்து சிங்கப்பூர் மீண்டு எழும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 1966ஆம் ஆண்டின் முதலாவது தேசிய தினஅணிவகுப்பு முதல், இந்த நாட்டின் உருவாக்கத்தைக் கொண்டாடவும் நாட்டுக்கு தங்கள் கடப்பாட்டை புதுப்பித்துக்கொள்ளவும் சிங்கப்பூரர்கள் தவறாமல் ஒன்று திரள்கின்றனர். கொரோனா நோய்த் தொற்று இருந்தபோதும் ஒரு நாடாக ஒன்றுபட்டிருப்பதன் அடையாளமாக அணிவகுப்பை நடத்த உறுதிகொண்டனர் என்றார் அவர்.

“கடுமையான பொருளியல் சவால்களை எதிர்நோக்கும் வேளையில், இந்த ஐக்கியம் முன் எப்போதையும்விட இப்போது முக்கியமாகி இருக்கிறது. 

“பொருளியல் சிறப்பாக இருந்த ஆண்டுகளில் அணிவகுப் புகள் நமது முன்னேற்றத்தைக் கொண்டாடின. ஒன்றாகச் சேர்ந்து இன்னும் சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கினோம். சிரமமான ஆண்டுகளிலும் தேசிய தின அணிவகுப்பை நடத்தி, நெருக்கடிகளைச் சமாளித்து சிறந்த நிலைக்கு நாட்டை முன்னேற்றும் உறுதியைப் புதுப்பித்துக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார். 
கொவிட்-19 நோய்த்தொற்று காலத்தில் உதவும் முன்களப் பணியாளர்களுக்கும் உதவி தேவைப்படுவோருக்கு உதவுவோ ருக்கும் வீர வணக்கம் செலுத்த இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பு ஒரு வாய்ப்பு என்ற அவர், அத்தகைய தொண்டாற்றுவோரை பெரிதும் பாராட்டினார்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள், சமூகப் பாதுகாப்பு வசதிகள் போன்ற கிருமிப் பரவல் அதிகமாக இருந்த இடங்களில் கிருமி சோதனையில் ஈடுபட பொது நல எண்ணம் கொண்ட ஆயிரக் கணக்கான சிங்கப்பூரர்கள் முன்வந்தனர். அவர்களுடன் வெளிநாட்டு ஊழியர்களும் இணைந்து தங்கள் பங்கை ஆற்றினர். இந்த தன்னலமற்ற செயல்கள் கொவிட்-19 நோய் பரவலை  சிங்கப்பூர் எதிர்கொள்வதில் உதவியது என்றும் திரு லீ குறிப்பிட்டார்

வரும் மாதங்களில் வர்த்தகங்கள் மூடலும் ஆட்குறைப்பும் வேலையின்மையும்  அதிகரிக்கலாம் என்பதால் சிங்கப்பூரர்கள் பதற்றமாகவும் கவலையோடும் இருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே என்றார் அவர்.

கடந்த 25 ஆண்டுகளில் மட்டுமே 1997ல் ஆசிய பொருளியல் நெருக்கடி, 2001ல் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல், 2008ல் உலகப் பொருளியல் நெருக்கடி என சிங்கப்பூர் பல பொருளியல் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.ஒவ்வொரு முறையும் மோசமான நிலையை எதிர்பார்த்து அஞ்சினோம். ஆனால் ஒவ்வொரு முறையும், சிங்கப்பூரின் நிலையைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாக உழைத்தோம், ஒன்றாகச் சமாளித்து முன்னேறினோம்.

தற்போதைய நெருக்கடியைச் சமாளித்து மீண்டுவர நீண்ட காலம் ஆகலாம்  என்ற திரு லீ, அனைவரும் தங்கள் பங்கையாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். எந்தச் சூழலிலும் எவரும் தனியாக விடப் படமாட்டார் என்று அவர் உறுதியளித்தார். 

தனிமனிதர்கள், முதலாளிகளின் சுமையைக் குறைக்க வேலை ஆதரவுத் திட்டம், சுய தொழில் செய்பவருக்கான வருமான நிவாரணத் திட்டம் ஆகியவற்றின் மூலம்  மக்கள் புதிய வேலைகளைத் தேடிக்கொள்ளவும் திறன்களை வளர்க்கவும் அரசாங்கம் உதவுவதை திரு லீ சுட்டினார்.
வேலைப் பயிற்சித் திட்டங்களையும் வாழ்க்கைத் தொழிலுக்கான தெரிவுகளையும் உருவாக்க ஊழியர் இயக்கம் முதலாளிகளுடன் இணைந்து செயல்படுகிறது. குறிப்பாக, வேலை இழப்புகளை தவிர்க்க முடியாதபட்சத்தில் ஒவ்வோர் ஊழியரும் நியாயமாகவும் கௌரவமாகவும் நடத்தப்படுவதை அது உறுதி செய்யும் என்றார் அவர்.

தேசிய தின அணிவகுப்பு 1966ல் தொடங்கியது முதல் கிட்டத்தட்ட எல்லா அணிவகுப்புகளிலும் பங்கேற்றிருக்கும் திரு லீ, 1968ஆம் ஆண்டு அணிவகுப்பின்போது மழை பெய்ததை நினைவுகூர்ந்தார்.

அப்போது கத்தோலிக்க  உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவர், ‘கிளரினட்’ ஊதுகருவியை ஒருங்கிணைந்த பள்ளிகளின் இசைக்குழுவினருடன் வாசித்தார். கடும் மழையினால் அணிவகுப்புக் குழுக்கள் திரண்டிருந்த திடல் நீரில்  மூழ்கியபோதும், அணிவகுப்பு தங்கு தடையின்றி தொடர வேண்டும் என அப்போது பிரதமராக இருந்த சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ உறுதிபூண்டிருந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon