சிங்கப்பூர்- மலேசியா: பயண ஏற்பாட்டுக்கு வரவேற்பு

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடை யிலான எல்லை கடந்த பயண ஏற்பாடுகளை இருதரப்புகளையும் சேர்ந்த நிறுவனங்கள் வரவேற்று இருக்கின்றன. அந்த ஏற்பாட்டின்படி முதலாளிகள் எல்லை கடந்து சென்று அத்தியாவசிய கூட்டங்களில் கலந்துகொள்ளலாம்.

ஊழியர்கள் அடிக்கடி தங்கள் குடும்பத்தினரைக் கண்டு வருவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். அந்தப் பயண ஏற்பாடு, இரு நாடுகளிலும் நிலவும் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று சிங்கப்பூர் தொழில்துறை கூட்டமைப்பும் மலேசியா-சிங்கப்பூர் தொழில்துறை மன்றமும் கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை கடந்த பயணங்களை மேற்கொள்ள நேற்று முதல் விண்ணப்பிக்க முடியும்.
மலேசியா-சிங்கப்பூர் தொழில்துறை மன்றம் இந்த இரு நாடுகளுக்கும் இடையில் வியாபாரத்தையும் முதலீடுகளையும் பெருக்கும் நோக்கத்தில் 2004ல் அமைக்கப்பட்டது.

இந்த மன்றம் கடந்த வியாழக்கிழமை மெய்நிகர் கூட்டத்தை நடத்தியது.மலேசியா-சிங்கப்பூர் எல்லை கடந்த இருதரப்பு பயண ஏற்பாடுகளை சிங்கப்பூர் நிறுவனங்கள் வரவேற்பதாக இந்த மன்றத்தின் சிங்கப்பூர் இணைத் தலைவர் டாக்டர் ராபர்ட் யாப் தெரிவித்தார்.

இந்த ஏற்பாட்டின் மூலம் முதலாளிகள் மலேசியாவுக்குச் சென்று முக்கியமான கூட்டங்களில் கலந்துகொள்ள முடியும். ஊழியர்களும் இரு நாடுகளுக்கு இடையில் எளிதாகச் சென்று தங்கள் குடும்பங்களைச் சந்தித்து வரலாம் என்று அவர் மேலும் கூறினார். நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இன்னும் சிறந்த முறையில் சேவையாற்றும் வகையில் சிங்கப்பூர்-மலேசியா பயண ஏற்பாடுகளை எப்படி மேம்படுத்தலாம் என்பது பற்றி இந்த மன்ற உறுப்பினர்கள் கருத்துகளையும் யோசனைகளையும் தெரிவிப்பார்கள் என்று டாக்டர் யாப் மேலும் குறிப்பிட்டார்.

டாக்டர் யாப், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவராக இருக்கிறார். ஒய்சிஎச் என்ற தளவாடப் போக்குவரத்து குழுமத்தின் நிர்வாகத் தலைவர் பொறுப்பிலும் இவர் இருக்கிறார். கொவிட்-19 தொற்று ஏற்படுவதற்கு முன்பாக அன்றாடம் கடற்பாலத்தைக் கடந்து 300,000 பேருக்கும் அதிகமான பயணிகள் இரு நாடுகளுக்கும் இடையில் சென்று வந்தனர். அவர்களில் அன்றாடம் சிங்கப்பூருக்கு வந்து செல்லும் சுமார் 100,000 மலேசியர்களும் அடங்குவர்.

இந்த இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட எல்லை கடந்த பயணங்கள், இரண்டு ஏற்பாடுகளின் கீழ் அனுமதிக்கப்படுகின்றன.
குறுகிய கால பயணிகளுக்கான பரஸ்பர அனுமதித் திட்டம் அவற்றில் ஒன்று. நீண்டகால அடிப்படையில் வருவோருக்கு மற்றோர் ஏற்பாடு உதவும்.

குறுகிய கால பயணம் மேற்கொண்டு அத்தியாவசிய தொழில்துறை அல்லது அதிகாரபூர்வ நோக்கங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையில் சென்று வருவோர் 14 நாட்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும். நீண்டகால குடிநுழைவு அனுமதி பெற்றிருக்கும் இரு நாட்டினரும் தொழில் அல்லது வேலை நிமித்தம் பரஸ்பரம் பயணங்களை மேற்கொள்ள மற்றோர் ஏற்பாடு வகை செய்யும்.
குறுகிய கால பயணம் மேற்கொண்டு வருபவர்கள் பயணத்தைத் தொடங்கும் முன் 72 மணி நேரத்துக்குள் கொவிட்-19 பரிசோதனையைச் செய்துகொண்டு இருக்க வேண்டும்.

தங்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழும் அவர்களிடம் இருக்க வேண்டும். அத்தகைய பயணிகள் தரையிறங்கும்போது மேலும் ஒரு சோதனை நடத்தப்படும். தொற்று இல்லை என்பது தெரியவரும் வரை அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். நீண்டகால அடிப்படையில் சிங்கப்பூருக்கு வருபவர்கள் ஏழு நாட்கள் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொவிட்-19 சோதனையையும் செய்துகொள்ள வேண்டும்.

தொற்று இல்லை என்பது உறுதியாக தெரியவந்த பிறகுதான் ஊழியர்கள் வேலையைத் தொடங்க முடியும்.

இதனிடையே, சிங்கப்பூர்-மலேசியா தொழில்துறை உறவுகள் இந்த வட்டாரத்துக்கு குறிப்பிடத்தக்கவை என்று கோலாலம்பூரை தளமாகக் கொண்டு செயல்படும் சையது இப்ராஹிம் & கோ என்ற சட்ட நிறுவனத்தின் தலைவர் டாக்டர் நிக் நோர்ஸ்ருல் தானி தெரிவித்தார்.

இருதரப்புகளையும் சேர்ந்த தொழில்துறையினர் இணையம் வழி பல கூட்டங்களை நடத்தி மின்னிலக்கப் பொருளியல் தொடர்பிலான யோசனைகளைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ள இணங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மலேசியா-சிங்கப்பூர் தொழில்துறை மன்றம் நடத்திய மெய்நிகர் கூட்டத்தில் பல அம்சங்களும் விவாதிக்கப்பட்டன.

மின்னிலக்கத் தொடர்புகள், இணையம் வழியிலான வர்த்தகம், கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடைப்பட்ட அதிவேக ரயில் சேவை முதலான பலவும் அவற்றில் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!