வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள் கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அபாயநிலையில் இருந்து மாற்றப்படும் என்றும் அவற்றின் செயல்பாடுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படும் என்றும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்து உள்ளார். அரசாங்க அமைப்புகளின் பணிக்குழு கொவிட்-19 கொள்ளைநோயை சமாளிப்பதில் செயல்பட்டது குறித்து அவர் நேற்று தமது ஃபேஸ்புக்கில் விளக்கி இருந்தார்.
மனிதவள அமைச்சைச் சேர்ந்த 1,000 பேர் உள்ளிட்ட சுமார் 3,000 அதிகாரிகள் வெளிநாட்டு ஊழியர்நலனில் அக்கறை செலுத்தியதாக திருவாட்டி டியோ தமது பதிவில் குறிப்பிட்டார். அரசாங்க அமைப்புகள் பணிக்குழுவின் செயல்பாடுகள் குறித்த ஆக அண்மைய விவரங்களை கடந்த வெள்ளிக்கிழமை மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியனிடம் மனிதவள அமைச்சு விளக்கியது. அமைச்சின் சேவை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் திருவாட்டி டியோவும் மனிதவள இரண்டாம் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங்கும் அண்மைய முன்னேற்ற நிலவரம் குறித்து மூத்த அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று அதிகரித்ததால் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தங்கும் விடுதி நடத்துநர்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் பொருட்டு பணிக்குழு ஏற்படுத்தப்பட்டது. தங்கும் விடுதிகள் இனிமேல் சமாளிக்கக்கூடிய நிலைக்கு மாற்றப்படும். மாற்றப்பட்ட பின்னர் அவை மூன்று கட்டங்களில் கவனம் செலுத்தும்.
பாதுகாப்பான மறுதொடக்கம். பாதுகாப்பான உருமாற்றம் மற்றும் பாதுகாப்பான தேசம் என்பன அந்த மூன்று கட்டங்கள்.
"கிருமிப் பரவல் தடுப்பு அதிரடித் திட்டம் நடப்பில் இருந்தபோது தேவைகளைக் குறைத்துக்கொண்டு உயிர்களைக் காப்பதில் கவனம் செலுத்தினோம்.
"பாதுகாப்பான மறுதொடக்கம் என்னும் முதற்கட்டத்தில் நாம் இவ்வாறு செயல்பட்டோம்.
"படிப்படியாக நாம் மீண்டும் நமது பணிகளைத் தொடங்கும்போது நமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் புதிதாக கிருமித்தொற்று உருவெடுப்பதைத் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார் திருவாட்டி டியோ.
வெளிநாட்டு ஊழியர் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டதற்காக அரசாங்க அமைப்புகளின் பணிக்குழு அதிகாரிகள், முதலாளிகள், தங்கும் விடுதி நடத்துநர்கள் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
முன்னதாக, புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உருவாவதைத் தடுக்கும் நோக்கில் நிலைமையை கண்காணித்து வருவதாக கடந்த வாரத் தொடக்கத்தில் அதி காரிகள் தெரிவித்து இருந்தனர். அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை மனிதவள அமைச்சு, கட்டட, கட்டுமான ஆணையம், பொருளியல் வளர்ச்சிக் கழகம், சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியன இணைந்து வெளியிட்ட அறிக்கையில், தொற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட தங்கும் விடுதிகளில் புதிய தொற்றுகள் குறித்து குறிப்பிட்டு இருந்தன.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த பெருமுயற்சிகள் வீணாகிவிடாதபடி பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை விளக்கியது. தங்கும் விடுதிகளுக்குள் செல்வது, அங்கிருந்து வெளியேறுவது போன்ற அன்றாட நடவடிக்கைகள் அதிகமாகும்போது புதிய கிருமித்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னைவிட அதிக விழிப்புடன் செயல்படுவது அவசியம் என்றும் அந்த கூட்டறிக்கை தெரிவித்தது.
வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பாக வேலைக்குத் திரும்ப கைபேசிச் செயலி மூலம் அவர்களின் உடல்நிலை தினமும் இரு முறை கண்காணிக்கப்படுவது தொடர வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.

