சிங்கப்பூரின் வடக்கே 400 ஹெக்டரில் இயற்கை எழில்கொஞ்சும் புதிய பூங்கா கட்டமைப்பு

சிங்கப்பூரின் வடக்கே 400 ஹெக்டரில் இயற்கை எழில்கொஞ்சும் புதிய பூங்கா கட்டமைப்பு

2 mins read
6b5ec35a-3272-4dd1-86b5-83399b490a34
பழமையான 'கேஷின் ஹவுஸ்' கட்டடம் மெருகூட்டப்பட்டதும் எப்படி இருக்கும் என்பதை ஓவியர் தமது கைவண்ணத்தில் விளக்கியுள்ளார். படம்: தேசிய பூங்காக் கழகம் -

சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் 400 ஹெக்டருக்கும் அதிக நிலப் பரப்புடன் கூடிய புதிய இயற்கைவள பூங்கா கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. தற்போதைய சுங்கை பூலோ நன்செய் நில காப்பகத்தைப் போல மூன்று மடங்கு பெரிதாக அது அமையவிருப்பதாக தேசிய பூங்காக் கழகம் நேற்று தெரிவித்தது. எதிர்காலத்தில் அமையவிருக்கும் தீவைச் சுற்றிய பொழுதுபோக்குத் தடம் என்னும் திட்டத்திற்கு இந்த பூங்கா கட்டமைப்பு அழகு சேர்க்கும். சிங்கப்பூர் முழுவதும் உள்ள பல்வேறு பசுமைப் பகுதிகளை இயற்கைவளப் பாதைகளின் வழியாகவும் பூங்காக்களின் இணைப்புகள் மூலமாகவும் ஒன்றிணைக்கும் திட்டம் இது. இயற்கை அழகை ரசிப்பவர்களின் கண்களுக்கு புதிய லிம் சூ காங் இயற்கைவளப் பூங்காவும் விருந்தளிக்க உள்ளது. சுங்கை பூலோ நன்செய் நில இயற்கைவளப் பகுதியின் மேற்கு நோக்கி விரிவடையக்கூடிய 18 ஹெக்டர் கடலோர இயற்கைப் பூங்கா உருவாக உள்ளது. அதில் இயற்கை அழகுகொஞ்சும் புதிய விளையாட்டுத் திடலும் இடம் பெறும். கிட்டத்தட்ட பத்து காற்பந்துத் திடல் அளவுக்குப் பெரியதாக அமையவுள்ள பூங்காப் பாதையில் சதுப்பு நிலங்கள், வனப் பகுதிகள், புதர்நிலங்கள், புல்வெளி அடர்ந்த பகுதிகள் என பச்சைப் பசேலென நிறைந்திருக்கும். பறவை இனங்கள் நடமாடும் இடமாகவும் அது இருக்கும். இயற்கை அம்சங்களுடன் எழுப்பப்படும் சிறுவர் விளையாட்டுத் திடலும் இடம்பெறும். புதிய இயற்கைப் பூங்கா வழியே அமைந்திருக்கும், காலம் காலமாக காக்கப்பட்டு வரும் காலனித்துவ கால பங்களாவான 'கேஷின் ஹவுஸ்' புதுப்பிக்கப்பட்டு நவீனமாக மெருகூட்டப்படும். மரபுடைமைக் கூறுகளுடனான புதிய கண்காட்சி நிலையமும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான மண்டபமும் அதில் உருவாக்கப்படும். மேம்படுத்தப்பட்ட இயற்கை எழில் கட்டடமாகவும் மரபுடைமை நிலையமாகவும் கேஷின் ஹவுஸ் திகழும். கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும் இங்கு இடமிருக்கும். இந்தக் கட்டடம் மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்கான ஏலக்குத்தகை அழைப்பை தேசிய பூங்காக் கழகம் விடுக்கும். கடலை நோக்கிய மேல்தளமும் அதில் அமைந்திருக்கும். மெருகூட்டப்பட்ட கட்டடத்தில் கருத்தரங்குக் கூடங்கள், பட்டறைகள் போன்றவற்றை நடத்துவதற்கான அரங்குகள் அமைக்கப்படும். கேஷின் ஹவுஸ் புதுப்பிப்புப் பணிகள் இவ்வாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட்-19 கொள்ளைநோய் நிலவரத்தைப் பொறுத்து இந்த மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. தீவின் 400 ஹெக்டர் இயற்கைவள பூங்கா கட்டமைப்பின் பசுமைப் பாதையாக லிம் சூ காங் இயற்கைவளப் பூங்கா அமையும். வடக்கு வட்டாரத்தில் நன்செய் நில பல்லுயிர் பாதுகாப்பை வலுப் படுத்தும் நோக்கில் புதிதாக சுங்கை பூலோ இயற்கைவள பூங்கா கட்டமைப்பும் உருவாக உள்ளது.