வலுவான குடும்ப பிணைப்பு கைகொடுக்கும்

வலுவான குடும்ப பிணைப்பு கைகொடுக்கும்

2 mins read
c6ad0452-426c-415d-be61-45694ded9434
சீனர் மேம்பாட்டு உதவி மன்றத்தின் குடும்பப் பிணைப்பு தினத்தில் இணையம் மூலம் கலந்து கொண்ட செய்தி யாளர்களிடம் பேசிய வெளியுறவு, போக்கு வரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள சிங்கப்பூரர்களுக்குத் தேவையான வலிமையையும் மீள்திறனையும் வலுவான குடும்பப் பிணைப்பு தரும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார்.

சீனர் மேம்பாட்டு உதவி மன்றத்தின் குடும்பப் பிணைப்பு தினத்தில் கலந்துகொண்டோரிடம் அவர் காணொளி மூலம் இதைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் லாபநோக்கமற்ற அமைப்பாகும்.

"நமது சமுதாயத்தின் முக்கிய அம்சமாக வலுவான குடும்பங்கள் திகழ்கின்றன. கொரோனா கிருமித்தொற்று நெருக்கடிநிலையிலும் நம்மிடையே இருக்கும் ஒருமைப்பாட்டு உணர்வை வலுப்படுத்துவதில் குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

"நமது அன்புக்குரியவர்களின் முக்கியத்துவத்தை இந்த நெருக்கடிநிலை நினைவூட்டியுள்ளது," என்று அதிபர் ஹலிமா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளியல் மந்தநிலையால் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு உதவ ஒதுக்கப்பட்டுள்ள $10 மில்லியன் குறித்து வெளியுறவு, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட் நேற்று பேசினார். திரு சீ மன்றத்தின் இயக்குநர் சபையிலும் உள்ளார்.

"பொருளியல் மந்தநிலை வேலையின்மை ஆகியவை காரணமாக குடும்பங்களுக்கு நிதிச் சுமை ஏற்பட்டிருப்பது எங்களுக்குத் தெரியும்.

இவர்களுக்கு உதவி செய்ய மன்றம் முன்வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக சேமித்து வைத்த வளங்களைக் கொண்டு உதவ இருக்கிறது. சேமித்த பணத்தைப் பயன்படுத்தி கூடுதல் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்கான நேரம் வந்துவிட்டது," என்று திரு சீ தெரிவித்தார்.

மன்றத்தால் ஏற்கெனவே நடத்தப்படும் திட்டங்களின் மூலமாக நிதி உதவி வழங்கப்படும்.

$720 நிதியுதவி பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 2,600லிருந்து 5,000க்கு உயர்கிறது.

சீனர் மேம்பாட்டு உதவி மன்றம்- சிங்கப்பூர் சீனக் குலவழிச் சங்கங்கள் உதவித் தொகை பெற்று வரும் கிட்டத்தட்ட 6,000 மாணவர்கள் நிதியுதவியைப் பெற மீண்டும் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை. அடுத்த ஆண்டு உதவித் தொகை பெற அவர்கள் விண்ணப்பம் செய்யாமலே தகுதி பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு உதவித்தொகை பெற விரும்பும் தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்கள் மன்றத்தின் இணையத்தளம் வழி விண்ணப்பம் செய்யலாம்.