பெரும் மாற்றத்திற்கான காலகட்டத்தில் இருக்கும் சிங்கப்பூர், தனது பிரச்சினைகளை மறுபரிசீலனை செய்து, புதிய சூழல்களுக்குப் பொருத்தமான மாதிரிகளையும் கொள்கைகளையும் உருவாக்க வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து உள்ளார்.
திறமைக்கு அங்கீகாரம், பல இன கலாசாரம் போன்ற சமூகத்தின் முக்கிய தூண்களும் சிங்கப்பூர் தனது கொள்கைகளைச் செயல்படுத்தும் வழிமுறைகளும் அதில் அடங்கும் என்று அதிபர் ஹலிமா குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் 14வது நாடாளுமன்றம் இன்று முதன்முறையாகக் கூடியபோது உரையாற்றிய அதிபர் இதனைத் தெரிவித்தார். கொவிட்-19 நோய்ப் பரவலை அடுத்து பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்யும் விதமாக, நாடாளுமன்றம், தி ஆர்ட்ஸ் ஹவுஸ் என இரு இடங்களில் இருந்தபடி எம்.பி.க்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த அதிபர், கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் புதிய தவணைக் காலம் தொடங்குவதையும் சுட்டினார்.
கொரோனா பரவல் தன்னைப்பேணித்தனத்தை மேலும் தூண்டி விடுவதாக அமைந்துள்ளது எனக் கூறிய திருவாட்டி ஹலிமா, இந்தப் போக்கு உலக நாடுகளுடன் வர்த்தகம் புரிவதன் மூலம் வாழ்வை மேற்கொண்டு வரும் சிங்கப்பூருக்குச் சவாலானதாக விளங்கும் என்றும் சொன்னார்.
பலதரப்பட்ட குரல்கள் ஒலிக்க வேண்டும், அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்திருக்கக்கூடாது என புதிய தலைமுறையினர் விரும்புவதால் சிங்கப்பூரும் ஒரு திருப்புமுனையில் இருப்பதாக அதிபர் குறிப்பிட்டார்.
"சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிகரமான நாடாகத் திகழ, உள் நாட்டிலும் வெளியுலகத்திலும் நிகழும் இத்தகைய மாற்றங்கள் குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டியதும் நமது பிரச்சினைகளை மறுபரிசீலனை செய்வதும் நமது இருப்பை மேம்படுத்திக்கொள்வதும் அவசியம்," என்றார் அவர்.
எடுத்துக்காட்டாக, அடுத்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரர்களுக்கு வேலைகளைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாக இருக்கும் என்றும் அதே வேளையில் வளர்ச்சியின் பலன்கள் எல்லாத் தரப்புக் குடிமக்களையும் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
கடந்த 55 ஆண்டுகளில் திறமைக்கு முன்னுரிமை என்ற கொள்கை சிங்கப்பூருக்கு நல்ல பலனை அளித்து வந்துள்ளதாக அதிபர் குறிப்பிட்டார். இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் சமூகக் கட்டமைப்புகள் எவ்வாறு வலுப்படுத்தப்பட்டனவோ, அதுபோன்று திறமைக்கு முன்னுரிமை முறையும் நாட்டின் வளர்ச்சியோடு இணைந்து மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
"வசதி குறைந்தோரைக் கைதூக்கி விடுவதற்கு அதிகமான மறுபகிர்வு மட்டுமே தீர்வாக இருக்க முடியாது," என்றார் திருவாட்டி ஹலிமா.
சமூக முன்னேற்றத்தை வலுப்படுத்துவதையும் தகுதி பற்றிய கண்ணோட்டத்தை விரிவுபடுத்துவதையும் நாம் தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே பல்லினக் கலாசாரம் என்பது சிங்கப்பூரின் மைய அடையாளமாக இருந்து வருவதாகக் குறிப்பிட்ட அதிபர், அது தொடர்ந்து பேணப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
சிங்கப்பூரின் சமூகச் சூழலுக்குப் பொருத்தமில்லாத, அதே நேரத்தில் மற்ற சமூகங்களில் காணப்படக்கூடிய மனப்போக்குகள், நெறிகள் போன்ற நம் நாட்டின் ஒருமைப்பாட்டைச் சோதிக்கும், மக்களைப் பல்வேறு திசைகளில் இழுத்துச் செல்லக்கூடிய பெரிய சக்திகள் இருப்பதை சிங்கப்பூரர்கள் உணர வேண்டியது அவசியம் என்றும் திருவாட்டி ஹலிமா விருப்பம் தெரிவித்தார்.
நெருக்கடியான தருணங்களில் குறுகிய எண்ணங்களுக்கு இடம் தரலாகாது என வலியுறுத்திய அவர், சிங்கப்பூரர் என்ற அடையாளம் பின்னால் வந்தவர்களை ஒதுக்கிவிட்டு உருவாக்கப்படவில்லை, வலுப்படுத்தப்படவில்லை என்றும் அடுத்தடுத்து வந்தவர்களால் நமது சமூகம் செழுமையடைந்து இருக்கிறது என்றும் சொன்னார்.
அரசியலைப் பார்க்கும்போது, எதிர்க்கட்சித் தலைவர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பதவி உருவாக்கப்பட்டிருப்பது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதிகமானோர் இருப்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று அதிபர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள் மீது நம்பிக்கையை உருவாக்கி, நாட்டைச் செழிப்புறச் செய்வதில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியினருக்கும் பங்கு இருக்கிறது என்றும் அவர் சொன்னார்.
ஆக்ககரமான விமர்சனத்தையும் அறிவார்ந்த விவாதத்தையும் அரசாங்கம் வரவேற்க வேண்டும் என்றும் அதே வேளையில் எதிர்க்கட்சிகளும் கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைப்பதோடு மட்டுமின்றி, ஆராய்ந்து, விவாதிக்கத்தக்க கொள்கை மாற்றங்களை முன்மொழிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"அரசியல் சார்பின்றி, பொதுவான காரணத்திற்காக ஒன்றிணைவது எப்படி என்பதே முக்கிய கேள்வி. நமது இலக்குகள், தடைகள் குறித்து பகிர்ந்து கொண்டு, ஒரு புரிதலுக்கு வரவேண்டும்," என்றார் அதிபர்.
எல்லா நேரங்களுக்கும் ஏற்ற தீர்வுகள் இல்லை என்பதை உணர்ந்து, இலக்கின் அடிப்படையில் புதிய யோசனைகளுக்குச் செவிமடுக்கும் வகையில் அரசாங்கத்தின் கொள்கைகள் பரிணமிக்கும் என அவர் உறுதியளித்தார்.
"எல்லா விஷயங்களிலும் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் எது சிறந்ததோ அதைச் செய்வோம்," என்றும் அவர் சொன்னார்.
நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை, அமைச்சுகள் தங்களது திட்டங்கள் குறித்த விவரங்களை முன்வைக்கும். அந்தத் திட்டங்கள், கொள்கைகள் தொடர்பில் அடுத்த திங்கட்கிழமையில் இருந்து நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறும்.

