அடுத்த சில ஆண்டுகளில் வேலைகளுக்கு சிங்கப்பூரில் தொடர்ந்து அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.
குடும்பங்களைப் பார்த்துக்கொள்ளவும் பொருளியல் மேம்படும் வரை திறன்கள் வளர்ப்பதை உறுதி செய்வதற்கு மக்கள் வேலை செய்வதே ஆகச்சிறந்த வழி என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய வேலைகள் உருவாக்கப்படுவதை நிலைத்திருக்க வைக்க பொருளியல் வலுவாகவும் போட்டித்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், அதனாலேயேதான் பொருளியலை உருமாற்றுவதற்கும் வாழ்வாதாரத்திற்குப் புதிய வழிகளைக் கண்டறிவதற்கும் அவசர தேவை இருப்பதாகச் சொன்னார்.
எடுத்துக்காட்டாக, விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகளுடன் தொடரும். மின்னிலக்கத் தொடர்புமுறை வலுப்படுத்தப்படும். புதிய சந்தைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் வர்த்தகங்களுக்கு உதவிக்கரம் நீட்டப்படும்.
இந்நிலையில் பொருளியலும் முக்கிய மாற்றங்களை எதிர்கொள்ளும் என்று குறிப்பிட்ட அதிபர் ஹலிமா, சில தொழில்துறைகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் என்றும் சில வேலைகள் காணாமல் போய்விடக்கூடும் என்றார். எனினும், சிங்கப்பூர் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடனும் மற்ற நாடுகளுடன் தொடர்புடையதாகவும் விளங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"நமது பொருளியலின் பெரும்பகுதி செழித்தோங்குகிறது. ஏனெனில், இந்த வட்டாரத்திற்கான துடிப்புமிக்க மையமாக நம்மை நாம் நிலைப்படுத்திக்கொண்டு உள்ளோம்," என்றார் அவர்.
கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் வேலை குறித்து சிங்கப்பூரர்கள் அதிகம் கவலைப்படுவது தம்மால் புரிந்துகொள்ள முடிவதாக அதிபர் ஹலிமா தெரிவித்தார்.
குறிப்பாக, குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்கள், வயது முதிர்ந்த ஊழியர்கள், பணியிடைக்கால சிங்கப்பூரர்கள் ஆகிய தரப்பினருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் தன்னால் ஆன அனைத்தையும் செய்து வருவதாக அவர் சொன்னார். எடுத்துக்காட்டாக சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவித் தொகை வழங்கி அரசாங்கம் அவற்றுக்கு ஆதரவு நல்கி வருவதாக அவர் கூறினார்.
புதிய வேலைகளை உருவாக்கவும் சிங்கப்பூரர்களின் திறன்களை மேம்படுத்தவும் அரசாங்கம் மற்றும் முதலாளிகளுடன் சேர்ந்து தேசிய வேலைகள் மன்றம் பணியாற்றி வருவதை அவர் சுட்டினார்.
"குறைந்த வருமான ஈட்டும் ஊழியர்கள், வயது முதிர்ந்த ஊழியர்களைப் பாதுகாப்பதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவோம். அவர்களில் பலர் நெருக்கடி காலத்தில் சிங்கப்பூர் தாக்குப்பிடிப்பதை உறுதி செய்தனர்.
"பணியிடைக்கால ஊழியர்களை மதிப்புமிகுந்த சொத்துகளாக கருதுமாறு முதலாளிகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். புதிய வேலைகளுக்கான வாய்ப்புகளையும் பயிற்சிகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்," என்றார் அதிபர் ஹலிமா.

