ஹாங்காங்கில் ஆடவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று: ஆய்வில் நிரூபணம்

2 mins read
7a2ae09e-9b47-4570-87b6-af2c6e509a01
அனைத்துலக அளவில் கொரோனா கிருமித்தொற்று இரண்டாவது முறையாக ஏற்பட்டிருப்பது இந்த ஆடவருக்கு அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

கடந்த ஏப்ரல் மாதத்தில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளான 33 வயது ஆடவர், அதிலிருந்து விடுபட்ட பிறகு, சில மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் கொவிட்-19க்குக் காரணமான Sars-CoV-2 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அனைத்துலக அளவில் கொரோனா கிருமித்தொற்று இரண்டாவது முறையாக ஏற்பட்டிருப்பது இந்த ஆடவருக்கு அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் ஐரோப்பாவிலிருந்து ஹாங்காங்குக்கு விமானம் மூலம் அவர் திரும்பியபோது விமான நிலையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா கிருமியின் இரு வேறு திரிபுகளால் அந்த ஆடவர் பாதிக்கப்பட்டதை மரபணுச் சோதனைகள் மேற்கொண்ட ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இரண்டாவது முறை ஏற்பட்ட கிருமித்தொற்றால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவில்லை; சிறிய அளவிலான உடல்நலக் குறைவு அவருக்கு ஏற்படலாம் என்பதை அது காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

Sars-CoV-2 கிருமி மனிதர்களிடையே தொடர்ந்து இருக்கக்கூடும் என்பதை தமது ஆய்வுகள் காட்டுவதாக டாக்டர் குவோக் யுங் யுவன் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களது இந்த ஆய்வு முடிவு கிளினிக்கல் இன்ஃபெக்‌ஷியஸ் டிசீசஸ் எனும் சஞ்சிகையில் வெளியிடப்படவுள்ளது.

"ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதன் வழி அல்லது தடுப்பு மருந்தின் வழியாக நோயெதிர்ப்பு சக்தி பெற்றிருந்தாலும்," மனிதர்களிடையே Sars-CoV-2 தொடர்ந்து நிலவக்கூடும் என்றனர் அவர்கள்.

பல நோயாளிகளுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு, அவர்களது கிருமித்தொற்று அறிகுறிகள் மறைந்த பல வாரங்களுக்குப் பிறகும் பரிசோதனைகளில் அவர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கிருமியின் திரிபுகள் மனிதர்களிடையே நிலவுகிறதா அல்லது மீண்டும் கிருமித்தொற்று ஏற்படுகிறதா அல்லது புதிய கிருமித்தொற்று ஏற்படுகிறதா என்பது பற்றிய தெளிவான புரிதல் இல்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்