தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் 18,000 வேலைகள், பயிற்சி வாய்ப்புகள்

தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் 18,000 வேலைகள், பயிற்சி வாய்ப்புகள்

2 mins read
ae7920f7-95e7-4cb3-a141-d52fd57656ad
-

தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் சிங்கப்பூரர்களுக்கு சுமார் 18,000 வேலைகள் மற்றும் திறன் பயிற்சி வாய்ப்புகள் இருப்பதாக தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த 12 மாதங்களில் இந்தத் துறையில் சிங்கப்பூரர்களுக்கு கூடுதலாக 1,800 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள 'பெக்டன் டிக்கின்சன்' எனும் பன்னாட்டு மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைமையகத்திற்கு இன்று வருகை அளித்தபோது திரு ஈஸ்வரன் இந்த விவரங்களைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் நீண்டகால வாழ்க்கைத்தொழிலை அமைப்பதற்கான நிலை தொடர்ந்து வலுவாக இருப்பதாக அவர் சொன்னார்.

அங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோவும் திரு ஈஸ்வரனுடன் இருந்தனர்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் ஊழியர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் திரு ஈஸ்வரன் கூறினார்.

"தேசிய அளவிலான இடைநிலைச் சம்பளத்தைவிட இந்தத் தொழில்துறையில் இடைநிலைச் சம்பளம் அதிகம்," என்று அவர் தெரிவித்தார்.

புதிய வேலைகளை உருவாக்க தொழில்நுட்பமும் மின்னிலக்கமயமும் வாய்ப்புகளை வழங்குவதாக அவர் கூறினார். அதற்கு எடுத்துக்காட்டாக, பெக்டன் டிக்கின்சன் நிறுவனத்தை அவர் சுட்டினார். இந்த வட்டாரத்தில் இணையப் பாதுகாப்பைக் கையாள சிங்கப்பூரில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையகம் செயல்படும் விதம் குறித்து அவர் பேசினார்.

இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வேலைகளை உருவாக்க தனியார்துறையுடன் சேர்ந்து அரசாங்கம் பணியாற்றி வருவதாக திரு ஈஸ்வரன் சொன்னார்.

எடுத்துக்காட்டாக, வேலை தேடும் 3,000 உள்ளூர்வாசிகளுக்காக பொருளியல் வளர்ச்சிக் கழகம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து கூகல் நிறுவனம் புதிய வேலை, திறன் பயிற்சி திட்டம் ஒன்றைக் கடந்த மாதம் தொடங்கியது.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் TechSkills Accelerator திட்டம் அறிவிக்கப்பட்ட கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 6,600 சிங்கப்பூரர்கள் சிறந்த தொழில்நுட்ப வேலைகளில் பணி அமர்த்தப்பட்டதாக திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.