எஸ் பாஸ், இ.பி.க்கான குறைந்தபட்ச சம்பளம் உயர்கிறது

எஸ் பாஸ், இ.பி.க்கான குறைந்தபட்ச சம்பளம் உயர்கிறது

3 mins read
e0ee0606-b36f-47e6-a0d4-6953fa393f43
-

சிங்கப்பூரில் எம்பிளாய்மெண்ட் பாஸ், எஸ் பாஸ் ஆகியவற்றின் பேரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்படும்.

இவர்களுக்கு நிறுவனங்கள் அதிகத் தொகையைச் செலவிட வேண்டி இருக்கும்.

கொவிட்-19 காரணமாக தொழிலாளர் சந்தை நிலவரங்கள் மாற்றம் கண்டு இருக்கின்றன. இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வெளிநாட்டு ஊழியர் கொள்கைகள் சரிப்படுத்தப்படுகின்றன.

இந்தச் சரியாக்கங்களின் ஓர் அங்கமாக எஸ் பாஸ், எம்பிளாய்மெண்ட் பாஸ் ஊழியர்களின் சம்பளம் கூட்டப்படுவதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் அதிபர் ஆற்றிய உரையின் பிற்சேர்க்கையான அமைச்சர் திருவாட்டி டியோ தன் அமைச்சின் முன்னுரிமைகளை எடுத்துரைத்து இருக்கிறார். அவற்றில் பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சம்பள அதிகரிப்பு பற்றிய விவரங்களை அமைச்சர் தெரிவிக்கவில்லை. என்றாலும் விரைவில் உயர்வு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்பிளாய்மெண்ட பாஸ் ஊழியர்களுக்கு இப்போதைய நிலையான மாதச் சம்பளம் குறைந்தபட்சம் $3,900. எஸ் பாஸ்தாரர்களுக்கு அது குறைந்தபட்சம் $2,400 ஆக இருக்கிறது.

முதிய அதிக அனுபவம் வாய்ந்த ஊழியர்களைப் பொறுத்த வரையில் ஊதியம் இன்னும் அதிகமாக உள்ளது.

புதிதாக இடம்பெறவிருக்கின்ற சம்பள உயர்வு இந்த ஆண்டில் இடம்பெறும் இரண்டாவது உயர்வாகும்.

கொவிட்-19 காரணமாக ஆட்குறைப்புகள் அதிகமாகி வருகின்றன. சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இடையில் வேலைகளைப் பெறுவதில் போட்டி அதிகரிப்பதால் கவலையும் கூடி வருகிறது.

பொருளியலை வேகப்படுத்த உலகத்துடன் நாம் இணைந்து இருந்தாலும் கொவிட்-19 நெருக்கடி காரணமாக சிங்கப்பூரர்களை முதலாளிகள் நியாயமாக நடத்த வேண்டிய தேவை முன்பைவிட இப்போது முக்கியமானதாக ஆகி இருக்கிறது.

அதுமட்டுமின்றி தங்களுடைய எம்பிளாய்மெண்ட் பாஸ், எஸ் பாஸ் ஊழியர்களிடையே அதிக பன்மயத்தையும் முதலாளிகள் நாட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிறுவனத்தில் இடம்பெறக்கூடிய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மிக அணுக்கமாக அலசி ஆராயப்பட்டு அவை நியாயமான முறையில் இடம்பெற்று இருக்கின்றன என்பது உறுதிப்படுத்தப்படும் என்றும் திருவாட்டி டியோ தெரிவித்தார்.

சிங்கப்பூரர்களைக் கொண்ட மூலாதார ஊழியர் அணி வலுவாக இருப்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் ஊழியர்கள் வளத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர் கொள்கைகள் காலக்கிரம முறைப்படி பரிசீலிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்றைய தேதியில் பார்க்கையில் 10 உள்ளூர் ஊழியர்களில் ஏறக்குறைய ஆறு பேர் பட்டத்தொழில், நிர்வாகம், மேலாண்மை, நிபுணத்துவம் ஆகிய வேலைகளைப் பார்க்கிறார்கள் என்றும் இந்த விகிதாச்சாரம் உலகிலேயே ஆக அதிகம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இத்தகைய வேலைகளைப் பார்க்கையில், எம்பிளாய்மெண்ட் பாஸ் ஊழியர் ஒருவர் இருந்தால் உள்ளூர் ஊழியர்கள் ஏழு பேர் இருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டினார்.

எம்பிளாய்மெண்ட் பாஸ் ஊழியருக்கான சம்பளம் இந்த ஆண்டு மே மாதம் $3,600லிருந்து $3,900க்கு உயர்த்தப்பட்டது.

எஸ் பாஸ் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் $100 உயர்த்தப்பட்டு இந்த ஆண்டு ஜனவரியில் $2,400 ஆகியது.

இதனிடையே, அதிபர் உரைக்கான சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் பிற்சேர்க்கையில் சிங்கப்பூரர்களைக் கொண்ட மூலாதார அணியின் முக்கியத்துவத்தை மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர் ஊழியர்களைக் கொண்ட வலுவான மூலாதார அணியைப் பெரிய நிதி நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த நிறுவனங்களுடன் மத்திய வங்கி செயல்பட்டு வருவதாகவும் திரு தர்மன் குறிப்பிட்டார்.

கொவிட்-19 நெருக்கடியில் இருந்து மீண்டு சிங்கப்பூர் நீண்டகால வளர்ச்சியைச் சாதிக்க முக்கியமான ஒரு துறையாக நிதித்துறை திகழ்கிறது என்பதைச் சுட்டிய திரு தர்மன்,

இந்தத் துறை தன்னுடைய உருமாற்ற திட்டத்தில் இடம்பெற்றுள்ள வளர்ச்சி மற்றும் வேலை இலக்குகளை நிறைவேற்றும் வகையில் உரிய வேகத்தில் மேம்பட்டு வருவதாகவும் கூறினார்.