எஸ் பாஸ், எம்பிளாய்மண்ட் பாஸ் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு

எஸ் பாஸ், எம்பிளாய்மண்ட் பாஸ் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு

3 mins read
85e06889-caf6-4b8f-9da5-028395a8375e
சிங்கப்பூரர்களை மூலாதாரமாகக் கொண்டுள்ள ஊழியரணியை உருவாக்கவும் கட்டிக்காக்கவும் நிறுவனங்களுக்கு மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும் திருவாட்டி டியோ சொன்னார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அடுத்த மாதத்தில் இருந்து வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் நோக்கில் எம்பிளாய்மண்ட் பாஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தது $4,500 வழங்கவேண்டும். இப்போது அவர்களுக்குக் குறைந்தபட்சமாக $3,900 வழங்கப்பட்டு வருகிறது.

நாற்பது வயதுகளில் உள்ள மூத்த, அனுபவமிக்க ஊழியர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் அதன்மூலம் குறைந்த வயது விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைப் போல கிட்டத்தட்ட இரு மடங்கு ஊதியத்தை அவர்கள் பெற முடியும் என்றும் மனிதவள அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

அத்துடன், இவ்வாண்டு டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து நிதிச் சேவைகள் துறையில் புதிதாகச் சேர்க்கப்படும் எம்பிளாய்மண்ட் பாஸ் ஊழியர்களுக்கு மாத ஊதியமாகக் குறைந்தது $5,000 வழங்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட துறைக்கு ஊதிய வரம்பு உயர்த்தி அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதியில் இருந்து எம்பிளாய்மண்ட் பாஸ் புதுப்பிப்புகளுக்கும் இந்தப் புதிய ஊதிய வரம்பு நிபந்தனைகள் பொருந்தும்.

அக்டோபர் மாதத்தில் இருந்து புதிய எஸ் பாஸ் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் $2,400லிருந்து $2,500க்கு உயர்த்தப்படுகிறது. எஸ் பாஸ் புதுப்பிப்பு விண்ணப்பதாரர்களுக்கு 2021 மே மாதத்தில் இருந்து இந்த ஊதிய உயர்வு விதி நடப்புக்கு வரும்.

அதேபோல, மூத்த, அனுபவமிக்க எஸ் பாஸ் அட்டைதாரர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பும் உயர்த்தப்பட வேண்டும்.

இப்போதைக்கு, எஸ் பாஸ் ஒதுக்கீட்டு விகிதத்திலும் தீர்வையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், சேவை, கட்டுமானம், கப்பல் பட்டறை, செயல்முறைப் பொறியியல் ஆகிய துறைகளில் முன்னர் அறிவிக்கப்பட்ட ஒதுக்கீட்டு விகிதக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

வேலைச் சந்தையில் மந்தநிலை காணப்படுவதால், வேலையின்மை விகிதம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது என்றும் பலரும் குறைந்த நேரம் வேலை பார்ப்பதால் இன்னொரு வேலையைத் தேடி வருகின்றனர் என்றும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"உள்ளூர் விண்ணப்பதாரர்களும் சமமான கல்வித் தகுதியை அல்லது நிகரான வேலைத் தகுதியைக் கொண்டிருக்கும் பட்சத்தில், வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ளக்கூடாது என எப்போதுமே முதலாளிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம்," என்றார் அமைச்சர்.

சிங்கப்பூரர்களை மூலாதாரமாகக் கொண்டுள்ள ஊழியரணியை உருவாக்கவும் கட்டிக்காக்கவும் நிறுவனங்களுக்கு மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும் திருவாட்டி டியோ சொன்னார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, சிங்கப்பூரில் 193,700 எம்பிளாய்மண்ட் பாஸ் அட்டைதாரர்களும் 200,000 எஸ் பாஸ் அட்டைதாரர்களும் உள்ளனர்.

நாட்டின் பொருளியல் விரிவு கண்டபோதும், அண்மைய ஆண்டுகளில் எம்பிளாய்மண்ட் பாஸ், எஸ் பாஸ் அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மெதுவடைந்துவிட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

கடந்த பத்தாண்டுகளின் முற்பாதியில் ஆண்டுக்கு 13,000 என்றிருந்த எம்ப்ளாய்மென்ட் பாஸ் அனுமதி உயர்வு, பிற்பாதியில் ஆண்டுக்கு 3,000ஆகக் குறைந்தது.

இதே காலகட்டத்தில், முதல் ஐந்தாண்டுகளில் ஆண்டுக்கு 17,500ஆக இருந்த எஸ் பாஸ் அனுமதி உயர்வு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 6,000த்திற்கும் கீழே இறங்கிவிட்டது.

எம்பிளாய்மண்ட் பாஸ், எஸ் பாஸ் விண்ணப்பங்களை மதிப்பிடும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் உள்ளூர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குகிறதா அல்லது தகுதிவாய்ந்த சிங்கப்பூரர்களுக்குப் பாகுபாடு காட்டுகிறதா என்பதற்கு மனிதவள அமைச்சு அதிக முக்கியத்துவம் அளிக்கும்.

நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புத் தகவல்கள் தமிழ் முரசு இணையப்பக்கத்தில்...: https://www.tamilmurasu.com.sg/jobs