உடல் நலக் குறைவால் பதவி விலகும் ஜப்பான் பிரதமர்

2 mins read
16faab79-fa3b-4ae9-87df-ec8da165c5ea
கடந்த 2007ஆம் ஆண்டில் பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகியதற்குக் காரணமான நீண்டநாள் செரிமானப் பிரச்சினைக்காக தற்போதும் சிகிச்சை பெறுவதாக அரசாங்கம் சில தகவல்களை வெளியிட்டது. படம்: ஏஎஃப்பி -

தலைமைத்துவம் மிகத் தேவைப்படும் காலகட்டத்தில் நாட்டின் தலைமைப் பொறுப்பில் வெற்றிடம் ஏற்படுவதை விரும்பவில்லை என்று குறிப்பிட்ட ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, தனது உடல்நலப் பிரச்சினை காரணமாக பதவி விலகுவதாக இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அல்சரேட்டிவ் கோலிட்டிஸ் எனும் செரிமானப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட திரு அபே, கடந்த ஜூன் மாதத்தில் தமக்கு மீண்டும் அந்தப் பிரச்சினை தலை தூக்கியதாகத் தெரிவித்தார்.

தற்போது தாம் எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகள் நிலையைச் சரிசெய்யப் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், கூடுதல் சிகிச்சை தேவைப்படும் என்றார். கொவிட்-19 பிரச்சினை தலைதூக்கியுள்ள வேளையில் அரசியல் வெற்றிடம் ஏற்படுவதைத் தவிர்க்கவே தாம் பதவி விலக முடிவெடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் தேர்தலில் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தாம் அந்தப் பதவியில் நீடிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜப்பானில் அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை 65 வயதான் திரு அபே, கடந்த திங்கட்கிழமை பெற்றார். ஏழாண்டுகள், 8 மாதங்களுக்கு பிரதமராக இருந்த தமக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தமது பதவிக்காலம் நிறைவுறுவதற்கு ஓராண்டுக்கு முன்பே பதவி விலகுவதற்கு மக்களிடம் மன்னிப்புக்கோரிக்கொண்டார் அவர்.

திரு அபே பதவி விலகியதன் தொடர்பில் வருத்தம் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், திரு அபேயுடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை நினைவுகூர்ந்தார். மேலும், திரு அபே விரைவில் குணமடையவும் தமது ஃபேஸ்புக் பதிவில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் பிரதமர் லீ.

அதனையடுத்து, ஜப்பானிய பங்குச் சந்தை சரிவை நோக்கித் திரும்பியது. நிக்கேய் குறியீடு, நாளின் தொடக்கத்தில் இருந்ததைவிட 2.1 விழுக்காடு குறைந்தது.

அண்மையில் அவர் இரு முறை மருத்துவமனைக்கு சென்றுவந்ததையடுத்து, அவரது உடல் நலம் பற்றிய ஐயம் எழத் தொடங்கியது.

கடந்த 2007ஆம் ஆண்டில் பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகியதற்குக் காரணமான நீண்டநாள் செரிமானப் பிரச்சினைக்காக தற்போதும் சிகிச்சை பெறுவதாக அரசாங்கம் சில தகவல்களை வெளியிட்டது.

நாட்டின் பொருளியலை மீட்க உறுதிபூண்டு 2012ஆம் ஆண்டில், மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு திரு அபேயின் உறவினர் ஐசாகு சாத்தோ பிரதமர் பதவி வகித்த நாட்களின் எண்ணிக்கையை திரு அபே கடந்த திங்கட்கிழமை முறியடித்தார்.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக பிரதமராக உள்ள திரு அபே, கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கையாண்ட விதம், அவரது கட்சி உறுப்பினர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு ஆகியவை அண்மையில் விமர்சனத்துக்கு உள்ளானதையடுத்து, மக்களின் ஆதரவு சற்று சரிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்