கட்டுமானத் தளங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, மேம்படுத்தப்பட்ட மின்னிலக்கத் தீர்வுகளைக் கடைப்பிடிப்பதற்கான செலவுகளை ஈடுசெய்வதற்கு உள்ளூர் கட்டுமான நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள $20 மில்லியன் நிதியைப் பயன்படுத்தலாம்.
இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிதித் திட்டம், மின்னிலக்கச் சாதனங்களுக்கான செலவில் 80 விழுக்காடு வரையிலான நிதியை வழங்குகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் $200,000 வரை நிதி வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உடல் வெப்பமாணிகள், பயோமெட்ரிக் முக அடையாள முறை, செயற்கை நுண்ணறிவு கண்காணிப்புக் கருவிகள், 'புளூடூத்' தொழில்நுட்பம் கொண்ட அணியும் சாதனங்கள் போன்றவை இந்த மின்னிலக்கச் சாதனங்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன.
'மேம்படுத்தப்பட்ட மின்னிலக்கத் தீர்வுகள்' என்று அழைக்கப்படும் இந்த $20 மில்லியன் திட்டத்திற்கு கட்டட, கட்டுமான ஆணையமும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் ஆதரவளிக்கின்றன.
மெய்நிகர்வழி இன்று நடைபெற்ற 'அனைத்துலகக் கட்டடச் சூழல் வாரம் 2020' என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, "பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகள் நடப்பில் இருப்பதால் சவால்கள் இருந்தாலும், மின்னிலக்கத் தீர்வுகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் வேலையைத் தொடங்க முடியும்," என்று கூறினார்.
மனிதவளத்தைச் சார்ந்து இருக்கும் நிலையை உயர் தொழில்நுட்பத் தீர்வுகள் குறைக்க உதவும் என்பதைச் சுட்டிய அவர், வர்த்தகம் தொடர்வதை அவை உறுதி செய்வதாகச் சொன்னார்.

