1990களில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தமிழாசிரியர் பணியில் திருமதி சாந்தி மூர்த்தி சேர்ந்தார்.
அந்தப் பணியை தவிர, வேறெந்த வேலையில் சேர்ந்திருந்தாலும் இதே அளவு திருப்தி கிடைத்திருக்காது என இன்று இவர் உறுதியாக கூறுகிறார்.
எஜ்ஃபீல்டு தொடக்கப் பள்ளியில் மூத்த தமிழாசிரியராக பணியாற்றும் இவர், இவ்வாண்டின் தேசிய தின பாராட்டு பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
சிறப்பான முறையில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது.
முந்தைய பேரி தொடக்கப் பள்ளியில் தனது கற்பித்தல் பயணத்தைத் தொடங்கிய திருமதி சாந்தி, 2002ஆம் ஆண்டிலிருந்து எஜ்ஃபீல்டு தொடக்கப் பள்ளியில் கற்பித்து வருகிறார்.
வீட்டில் தமிழ் புழக்கம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு நவீன உத்திகளைப் பயன்படுத்தி மாணவர்களிடையே மொழி ஆர்வத்தைத் தூண்ட கற்றல் அணுகுமுறையை காலத்திற்கு ஏற்றவாறு தாம் மாற்றி வருவதாக அவர் விளக்கினார்.
இன்றைய தலைமுறையினர் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளுடன் வளர, அவற்றின் பயன்பாட்டுடன் கற்றல் அணுகுமுறையை இணைக்கும்போது அது மாணவர்களை இன்னும் எளிதில் சென்றடைகிறது என்பது இவரது கருத்து.
"தமிழ் மொழி சார்ந்த விளையாட்டுகள், புதிர்கள் ஆகியவற்றை கணினியில் நடத்தும்போது மாணவர்களின் கவனத்தை அது ஈர்க்கிறது. மேலும், வாய்மொழி திறனை சோதிக்க, ஒரு ஒளிக்காட்சியைப் பார்த்துவிட்டு தங்களது கருத்துகளைக் குரல் பதிவு மூலம் பதிவேற்றம் செய்ய தற்போதைய கற்றல் அணுகுமுறை வழிவகுக்கிறது," என்று உதாரணம் காட்டினார் திருமதி சாந்தி, 50.
கல்வியில் போதிய அளவு பெற்றோரின் ஆதரவைப் பெறாத மாணவர்கள் மற்றும் கல்வியில் அதிக நாட்டம் கொண்டிராத மாணவர்களுக்கு ஊக்கம் தருவது ஆசிரியர்களுக்கு பெரிய சவாலாக அமைவதாக குறிப்பிடும் இவர், இதுபோன்ற மாணவர்களின் கற்றல் பயணத்தில் அதிக ஈடுபாடு காட்டி அவர்களை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வருவதுதான் தமக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது என்றார்.
வகுப்பறையில் தமது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் திருமதி சாந்தி, அவ்வாறு செய்யும்போது தங்களாலும் ஒரு விஷயத்தைச் செய்ய முடியும் என்ற ஆக்கபூர்வமான தாக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது என்றார்.
அவ்வாறு உற்சாகத்துடன் படித்த இவரது மாணவர்கள் இன்று கற்பித்தல் துறை உட்பட பற்பல துறைகளில் கால்பதித்து தமக்குப் பெருமை சேர்த்து வருவதாக திருமதி சாந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சமூக ஊடகங்களில் இவருடன் இணையும் முன்னாள் மாணவர்கள், இன்றளவும் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு இவரை அழைக்கின்றனர். அவ்வப்போது இவரிடமிருந்து அறிவுரையும் பெறுகின்றனர்.
எனவே, மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி என்ற சிறந்த அந்தஸ்த்தை திருமதி சாந்திக்கு இது கொடுத்துள்ளது.
"எதிர்காலத் தமிழாசிரியர்கள் மொழி மீதுள்ள ஆர்வத்துடன் பொறுமையைக் கடைப்பிடித்து மாணவர்களுடன் நெருக்கமான பந்தத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
"நல்ல உறவை நிலைநாட்டும்போது, நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும்," என்று கூறினார் சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கும் திருமதி சாந்தி.

